கொடைக்கானலில் ‘கஜா’ புயலின் தாக்கம் அதிகரிக்க காரணம் என்ன? - விஞ்ஞானிகள் விளக்கம்


கொடைக்கானலில் ‘கஜா’ புயலின் தாக்கம் அதிகரிக்க காரணம் என்ன? - விஞ்ஞானிகள் விளக்கம்
x
தினத்தந்தி 19 Nov 2018 4:15 AM IST (Updated: 19 Nov 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் பகுதியில் ‘கஜா’ புயலின் தாக்கம் அதிகரிக்க காரணம் குறித்து வானிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி ‘கஜா‘ புயல் கோரத்தாண்டவம் ஆடியது. அன்றைய தினம் மாவட்டம் முழுவதும் காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை பலத்த சூறாவளி காற்றுடன், கனமழை கொட்டித்தீர்த்தது. அதன்பிறகு மழை மற்றும் காற்றின் வேகம் குறைந்தது.

‘கஜா’ புயலால் மாவட்டம் முழுவதும் சுமார் 1,500 மின்கம்பங்கள் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கொடைக்கானலில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் கடந்த 2 நாட்களாக இருளில் சிக்கி தவிக்கின்றன.

‘கஜா’ புயலால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக் கானல் தான் அதிக பாதிப்புகளை சந்தித்தது. கன மழைக்கு கொடைக் கானல் பகுதியில் 5 பேர் இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ‘கஜா’ புயல் பாதிப்பால் மாவட்டம் முழுவதும் சுமார் 4 மணி நேரம் கனமழை பெய்த நிலையில், கொடைக்கானல் பகுதிகளில் மட்டும் புயலின் தாக்கத்தால் 24 மணி நேரம் மழை பெய்தது.

இது குறித்து கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் உள்ள மத்திய அரசு வானிலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் செல்வேந்திரன், பாண்டி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

‘கஜா’ புயல் காரணமாக கடந்த 15-ந்தேதி இரவு 9 மணி முதல் 16-ந்தேதி இரவு 9 மணி வரை, 24 மணி நேரம் கொடைக்கானல் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் தான் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதிகபட்சமாக அப்சர்வேட்டரியில் சுமார் 20 செ.மீ. மழை பதிவானது.

புயல் காரணமாக 16-ந்தேதி காலை முதல் மதியம் மணி வரை பலத்த காற்று வீசியது. இந்த காற்று வடக்கு, மேற்கு, தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் இருந்து மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வரை வீசியது. இதற்கு காரணம் ‘கஜா’ புயலின் மையப்பகுதி கொடைக்கானல் பகுதியில் கடந்தது தான்.

இதனால் பெய்த பலத்த மழையினால் ஏராளமான மரங்கள் சாய்ந்தது, மண்சரிவும் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து புயல் வலுவிழந்து அரபிக் கடலை நோக்கி சென்றது. ‘கஜா’ புயல் கடலில் இருந்த போது அதன் விட்டம் 24 கிலோ மீட்டராக இருந்தது. அது, கொடைக்கானல் பகுதிக்கு வந்த போது மிகவும் குறுகி விட்டது.

கொடைக்கானல் பகுதியில் வடகிழக்கு பருவமழை வழக்கமாக அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். ஆனால் கேரள மாநிலத்தில் நிலவிய புயல் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவது தாமதம் ஆனது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த மழை டிசம்பர் மாதம் வரை இல்லாமல் அதற்கு மேலும் நீடிக்கும் நிலை உள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என தெரிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story