தொழிலாளியை கொலை செய்த 2 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சம் பிடிக்க தனிப்படை விரைந்தது


தொழிலாளியை கொலை செய்த   2 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சம் பிடிக்க தனிப்படை விரைந்தது
x
தினத்தந்தி 19 Nov 2018 10:45 PM GMT (Updated: 19 Nov 2018 3:37 PM GMT)

கொட்டாரத்தில் கட்டிட தொழிலாளியை கொலை செய்த 2 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ஏசுவடியான் என்ற பஞ்சு (வயது 60), கட்டிட தொழிலாளி. இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ஏசுவடியானுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜெகன் (35), சதீஷ் (22) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டு முன் ஏசுவடியான் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஜெகனும், சதீசும் சேர்ந்து ஏசுவடியானை கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு, தப்பி ஓடி விட்டனர். இந்த கொலை தொடர்பாக ஜெகன், சதீஷ் ஆகியோர் மீது கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது ஜெகன், சதீஷ் ஆகிய 2 பேரின் உறவினர் வீடுகளும் திருச்செந்தூர் மற்றும் திசையன்விளை பகுதியில் இருப்பது தெரிய வந்தது. எனவே அவர்கள் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

இதற்கிடையே தொழிலாளியை கொலை செய்த 2 பேரையும் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் திருச்செந்தூர் மற்றும் திசையன்விளை பகுதிகளுக்கு விரைந்து உள்ளனர்.

Next Story