முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக ரூ.33 லட்சம் மோசடி - தனியார் நிதிநிறுவனம் மீது புகார்
முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி ரூ.33 லட்சம் மோசடி செய்ததாக மதுரை நிதிநிறுவனம் மீது பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
திண்டுக்கல்,
கொடைக்கானலை அடுத்த குண்டுபட்டியை சேர்ந்த டென்சிங், திருத்துறைப்பூண்டியை சேர்ந்த பாப்பையன், சிவகங்கையை சேர்ந்த புஷ்பா, அரவக்குறிச்சியை சேர்ந்த அஷ்ரப்அலி ஆகியோர் திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் மதுரையை சேர்ந்த தனியார் நிதிநிறுவனத்தினர் தங்களை மோசடி செய்து விட்டதாக கூறியிருந்தனர்.
இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-
மதுரையில் ஒரு தனியார் நிதிநிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் மாவட்டந்தோறும் வந்து பொதுமக்களை சந்தித்து, நிதிநிறுவனத்தின் சேமிப்பு திட்டங்கள் குறித்து விளக்கினர். அதில் மாதாந்திர சேமிப்பு திட்டம், முதலீடு ஆகியவற்றுக்கு அதிக வட்டி தருவதாகவும், வீடு கட்டி தருவதாகவும் தெரிவித்தனர்.
அதை உண்மை என நம்பி நாங்கள் பணம் செலுத்தினோம். மேலும் எங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விவரத்தை கூறி அவர்களையும் நிதிநிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்ய வைத்தோம். அந்த வகையில் நாங்கள் ரூ.33 லட்சம் வரை பணம் செலுத்தி இருக்கிறோம். இதில் பலர் முழுமையாக பணத்தை செலுத்தி விட்டதால், அவர்களுக்கு நிதிநிறுவனம் முதிர்வு தொகை வழங்க வேண்டியது இருந்தது.
இந்த நிலையில் முன்அறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென அந்த நிதிநிறுவனம் மூடப்பட்டு விட்டது. இதனால் செலுத்திய பணத்தை திரும்ப பெற முடியாமல் தவித்து வருகிறோம். எனவே, நிதிநிறுவனம் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும் என்று கூறினர்.
Related Tags :
Next Story