மூகாம்பிகை நகரில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
மூகாம்பிகை நகரில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் எனக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினார். அப்போது திருப்பூர் பலவஞ்சிபாளையம் மூகாம்பிகை நகரை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
திருப்பூர் மாநகராட்சி 52–வது வார்டு பலவஞ்சிபாளையம் மூகாம்பிகை நகரில் 300 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் பி.ஏ.பி. வாய்க்கால் பகுதியில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், சாக்கடை நீர் வீடுகளுக்கு முன்பு தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில் மேலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.
வீடுகளுக்கு முன்பு சாக்கடைநீர் மற்றும் மழைநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எங்கள் பகுதியில் பலர் காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒரு குழந்தையும் இறந்துள்ளது. மழைக்காலம் தொடங்கியுள்ளதால் சாக்கடை கால்வாய் அமைத்து சாக்கடை மற்றும் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
வீரபாண்டி ஜே.ஜே.நகரை சேர்ந்த நிர்மலா என்பவர் கொடுத்த மனுவில் ‘‘ வீரபாண்டி பாரதிநகரில் உள்ள பாரத் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் எனது மகள்கள் சர்மிதா, யாஷிதா ஆகியோர் படித்து வருகிறார்கள். இதில் சர்மிதா 6–வது, யாஷிதா 3–வது வகுப்பு. இந்நிலையில் எனது மகள்கள் இருவருக்கும் ஆண்டு கட்டணமாக பள்ளியில் நான் செலுத்தியது போக மீதம் ரூ.13 ஆயிரம் கட்ட வேண்டியுள்ளது.
இந்த பணத்தை கட்டாததால் எனது மகள்கள் இருவருக்கும் மாற்றுச்சான்றிதழை பள்ளி நிர்வாகம் கொடுத்துவிட்டது. மேலும், பணம் தான் முக்கியம். படிப்பு முக்கியம் இல்லை என எங்களிடம் எழுதியும் வாங்கிவிட்டனர். தற்போது எனது மகள்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் தொடர்ந்து படிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றிருந்தார்.
பல்லடம் அறிவொளிபுதூரை சேர்ந்த முத்தழகு என்பவர் கொடுத்த மனுவில் ‘‘ நான் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வருகிறேன். அப்போது அதே நிறுவனத்தில் வேலை செய்த செல்வநாயகி என்பவரை காதலித்து திருமணம் செய்தேன். எங்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு செல்வநாயகி என்னை விட்டு பிரிந்து சென்றார்.
இதன் பின்னர் குழந்தையை கேட்டார். நான் கொடுக்க மறுத்துவிட்டேன். இதனைத்தொடர்ந்து பல்லடம் மகளிர் போலீஸ் நிலையத்தில் செல்வநாயகி புகார் கொடுத்தார். அங்கு விசாரணைக்கு அழைத்து சென்ற போது, குழந்தையை செல்வநாயகியிடம் போலீசார் வாங்கி கொடுத்து விட்டார்கள். எனவே எனது குழந்தையை மீட்டுத்தர வேண்டும். எங்களை தரக்குறைவாக பேசிய பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மீது துறைரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
ஆதித்தமிழர் பேரவையினர் கொடுத்த மனுவில் ‘‘ பெருமாநல்லூர், குன்னத்தூர், ஊத்துக்குளி, கவுண்டாம்பாளையம் மற்றும் சேடர்பாளையம், கூலிபாளையம் நால்ரோடு, செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் எப்போதும் மதுவிற்பனை செய்யப்படுகிறது. இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே இதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் ’’ என்று கூறியிருந்தனர்.