வெங்கமேட்டில் குப்பை கிடங்கு அமைப்பதை தடுக்க வேண்டும்; கலெக்டரிடம், பொதுமக்கள் மனு


வெங்கமேட்டில் குப்பை கிடங்கு அமைப்பதை தடுக்க வேண்டும்; கலெக்டரிடம், பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 20 Nov 2018 4:15 AM IST (Updated: 20 Nov 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

வெங்கமேட்டில் குப்பை கிடங்கு அமைப்பதை தடுக்க வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது திருப்பூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

திருப்பூர் மாநகராட்சியின் 4–வது வார்டில் திருப்பூரின் நவீன அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் அமைந்துள்ளன. மேலும், இந்த பகுதியில் ஏராளமான நிறுவனங்களும் உள்ளன. இதுபோல் பழங்கால மாதாச்சியப்பன் என்கிற மாதேஸ்வரன் ஆலயமும் உள்ளது. இந்த நிலையில் எங்கள் பகுதியில் அரசு மற்றும் மாநகராட்சி குப்பை கிடங்கு, ஆடு, மாடு வதை கூடம் ஆகியவை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், எங்கள் பகுதியில் உள்ள தடுப்பணையில் கட்டிட கழிவுகளை கொட்டி வருகிறார்கள். இதனையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை அருந்ததியர் பாசறையினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

‘‘திருப்பூர் தெற்கு வட்டம் செங்காட்டுபாளையம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் 2 ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி அவதியடைந்து வருகிறோம். குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எனவே குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மேலும், இங்கு பொது கழிப்பிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. இதனையும் திறக்க வேண்டும். மேலும், சமுதாய நலக்கூடம் உள்பட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.’’ இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

தமிழ்நாடு தியாகி குமரன் பொது தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த மனுவில் ‘‘திருப்பூரில் பழைய பஸ் நிலையத்தின் முன்பு உள்ள புதிய மேம்பாலத்தின் ஒரு பகுதியில் மட்டும் சர்வீஸ் சாலை அமைக்கப்படாததால், வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே இந்த மேம்பாலத்தின் நடுப்பகுதியில் டிவைடர்கள் அமைக்க வேண்டும். விபத்தை தடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.

பல்லடம் அறிவொளிநகர் பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் ‘‘எங்கள் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறோம். பெரும்பாலானவர்கள் இங்கு கூலித்தொழிலாளர்கள். எங்கள் குடியிருப்பின் மேற்கு பகுதியில் கோழிப்பண்ணை உள்ளது. இதனால் அதிகளவில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றிருந்தனர்.

அலகுமலையை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் ‘‘எங்கள் பகுதியை சேர்ந்த சிலர் எங்களுடைய பகுதியை ஆக்கிரமிப்பு செய்யும் எண்ணத்துடன் எங்களை எங்கள் பகுதிக்குள்ளேயே வரக்கூடாது என தடுத்து வருகின்றனர். இந்த சொத்துகள் வருவாய் இனங்கள் அடிப்படையில் எங்கள் பெயரிலேயே உள்ளன. இது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பஞ்சமி பூமியாகும். இந்த இடத்தை அனுபவிக்க இடையூறு செய்யும் நபர்களிடம் இருந்து பாதுகாப்பு வழங்கி, எங்கள் பூமியை கவுரவத்துடன் வைத்து விவசாயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.

திருப்பூர் மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கொடுத்த மனுவில் ‘‘ மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை புயல், வெள்ள காலத்தில் மட்டுமே நாடி எந்தவொரு முறையான பராமரிப்பு ஆவணங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லாமல் பணிகளுக்கு அழைத்து செல்லும் மின்வாரிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் பகுதிகளில் 250–க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். தற்போது மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் கஜா புயல் பாதித்த பகுதிகளில் சேதமடைந்த மின்சார கம்பங்களை சரிசெய்யும் பணிகளுக்கு முறையான ஆவணங்களுடன் அழைத்து சென்றால், புயல் பாதித்த பகுதிகளில் வேலை செய்ய தயாராக உள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகும் அவலநிலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.


Next Story