அனுப்பர்பாளையத்தில் பேரனிடம் இருந்து பணத்தை பெற்றுத்தரக்கோரி 101 வயது மூதாட்டி புகார்
பேரனிடம் இருந்து பணத்தை பெற்றுத் தரக்கோரி 101 வயது மூதாட்டி அனுப்பர்பாளையம் போலீசில் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அனுப்பர்பாளையம்,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு மன்றாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி கண்ணியம்மாள் (வயது 101). பழனிச்சாமி ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுடைய 2 மகன்களில் மூத்த மகன் அருணாச்சலம் இறந்து விட்டார். 2–வது மகனான துரைசாமியுடன் கண்ணியம்மாள் மன்றாம்பாளையத்தில் வசித்து வருகிறார்.
அருணாச்சலத்தின் மகனும் கண்ணியம்மாளின் பேரனுமான சேகர் என்பவர் திருப்பூர் போயம்பாளையத்தை அடுத்த கங்காநகரில் வசித்து வருகிறார். சேகரை கண்ணியம்மாள் சிறு வயதில் இருந்தே வளர்த்து வந்ததுடன் அவ்வப்போது அவருக்கு பண உதவியும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையின் போது திருப்பூர் வந்த கண்ணியம்மாள் சேகரை சந்தித்து தனக்கு கொஞ்சம் பணம் தந்து உதவுமாறு கேட்டுள்ளார். அப்போது சேகர், கண்ணியம்மாளுக்கு ரூ.50 ஆயிரம் தருவதாக கூறினார். இதை உறுதி செய்யும் வகையில் ஒரு பத்திரத்தில் சேகர் எழுதி கையெழுத்தும் போட்டு கொடுத்துள்ளார். இதையடுத்து ஓரிரு நாட்கள் கழித்து கண்ணியம்மாள் சேகரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார்.
இதனால் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் கண்ணியம்மாள் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் சேகரை அழைத்து விசாரணை நடத்தினர். ஆனால் சேகர் போலீசாரிடம் பாட்டிக்கு பணத்தை கொடுக்க முடியாது என்று கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு கண்ணியம்மாள் சேகரின் குழந்தை பருவ போட்டோவுடன் மீண்டும் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் சேகரின் போட்டோவை காட்டியபடி, நான் தூக்கி வளர்த்த பிள்ளை தற்போது என்னை தூக்கி எரிகிறதே என்று கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். மேலும் சேகரிடம் எப்படியாவது பணத்தை பெற்று தரும்படி போலீசாரிடம் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், சேகர் பணத்தை தரவில்லை என்றால் நான் இறந்தாலும் கூட என் உடலை பார்க்க வரக்கூடாது என்று கூறினார். இதையடுத்து போலீசார் கண்ணியம்மாளை சமாதானப்படுத்தினார்கள். இந்த சம்பவத்தால் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.