தேங்காய் வியாபாரிகளால் தென்னை விவசாயிகளுக்கு ஏற்படும் சிரமங்களை தீர்க்க வேண்டும், கலெக்டரிடம் மனு


தேங்காய் வியாபாரிகளால் தென்னை விவசாயிகளுக்கு ஏற்படும் சிரமங்களை தீர்க்க வேண்டும், கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 20 Nov 2018 3:15 AM IST (Updated: 20 Nov 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சிவஞானம் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல இடங்களில் இருந்து ஏராளமானோர் மனு கொடுத்தனர்.

விருதுநகர்,

தென்னை விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சிக்கந்தர்பாஷா, கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகராஜபுரம், சேதுநாராயணபுரம், கான்சாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் தென்னை சாகுபடி நடந்து வருகிறது. இங்குள்ள தென்னை விவசாயிகளிடம் தேங்காய் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் பல்வேறு சிரமங்களை தருகின்றனர். 1000 தேங்காய்க்கு சிலுக்காய் என்று 150 தேங்காய்களை கழித்து விடுகின்றனர். ஓசி தேங்காய் என்று 15 தேங்காய்களை குறைத்துவிடுகின்றனர். மற்ற மாவட்டங்களில் 5 தேங்காய் தான் குறைக்கப்படுகிறது. ஒரு டிராக்டரில் 1000 தேங்காய் ஏற்றினால் 250 தேங்காய் கழிவாக போய்விடுகிறது. 10 ஆயிரம் தேங்காயை கொள்முதல் செய்தால் 4,500 தேங்காய்களை கழித்து விட்டு 5,500 தேங்காய்க்கு தான் விலைகொடுக்கிறார்கள். இவ்வாறு பல்வேறு சிரமங்களை தருகிறார்கள். கந்துவட்டி கொடுமைபோல் நடக்கிறது.

தென்னை விவசாயிகள் அவசர தேவைக்கு தேங்காய் வியாபாரிகளிடம் ரூ.50 ஆயிரம் பணம் வாங்கினால் அதற்கு 24 சதவீதம் வட்டி வாங்கி கொள்வதுடன் கொள்முதல் செய்யும் தேங்காய் விலையிலும் ஒரு ரூபாய் குறைத்து விடுகின்றனர். இம்மாதிரியான பிரச்சினைகளால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே தென்னை விவசாயிகளுக்கு தேங்காய் வியாபாரிகளால் ஏற்படும் சிரமங்களை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story