திருபுவனை அருகே கரும்பு தோட்டத்தில் கூலித்தொழிலாளி கழுத்தை அறுத்து படுகொலை


திருபுவனை அருகே கரும்பு தோட்டத்தில் கூலித்தொழிலாளி கழுத்தை அறுத்து படுகொலை
x
தினத்தந்தி 20 Nov 2018 4:30 AM IST (Updated: 20 Nov 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

திருபுவனை அருகே கரும்பு தோட்டத்தில் கூலித்தொழிலாளி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வருகிறார்கள்.

திருபுவனை,

புதுவை மாநிலம் திருபுவனை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 46), கூலித்தொழிலாளி. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர் திருபுவனையில் வாடகை வீட்டில் மனைவியுடன் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லட்சுமணனின் மனைவி விபத்தில் உயிரிழந்தார். அதையடுத்து அவருடைய மகனை ஒடிசாவுக்கு லட்சுமணன் அனுப்பி வைத்துவிட்டார். மனைவி இறந்த துக்கத்தில் லட்சுமணன் மது பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் திருபுவனை அருகே உள்ள பெரியபேட் கரும்பு தோட்டத்தில் நாய்கள் குரைத்து கொண்டே இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது லட்சுமணன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அதனை கண்டவுடன் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதுகுறித்து திருபுவனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்தவுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்–இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

லட்சுமணன் கொலை செய்யப்பட்ட இடத்தில் மதுபாட்டில், தண்ணீர் பாக்கெட்டுகள் ஆகியவை சிதறிக்கிடந்தன. அவர் மதுகுடிக்க சென்றபோது அங்கு யாருடனோ ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். கொலையாளி யார்? என திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story