‘கஜா’ புயலில் கே.கே.நகர் பூங்காவில் சாய்ந்த மரம் 4 நாட்களாகியும் அகற்றப்படவில்லை


‘கஜா’ புயலில் கே.கே.நகர் பூங்காவில் சாய்ந்த மரம் 4 நாட்களாகியும் அகற்றப்படவில்லை
x
தினத்தந்தி 19 Nov 2018 10:45 PM GMT (Updated: 19 Nov 2018 8:50 PM GMT)

‘கஜா’ புயலில் கே.கே.நகர் பூங்காவில் சாய்ந்த மரம் 4 நாட்களாகியும் அகற்றப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

கே.கே.நகர்,

திருச்சி கே.கே.நகரில் ராஜாராம் சாலையில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இதில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, உடற்பயிற்சிக்கு உபகரணங்கள், சிறுவர்கள் விளையாட உபகரணங்களும், பூச்செடிகளும், மரங்களும் உள்ளன. பொதுமக்கள் பொழுதை போக்கவும், நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள இந்த பூங்கா மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி கஜா புயல் தாக்குதலில் பூங்காவில் பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் பூங்காவில் இருந்த விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தன. மேலும் நடைபாதை மீது மரக்கிளைகள் விழுந்தன. மரம் சாய்ந்து விழுந்ததால் பொதுமக்கள் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பூங்காவும் தற்காலிகமாக பூட்டப்பட்டு விட்டன.

இந்த நிலையில் பூங்காவில் சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். மாநகராட்சி ஊழியர்களும் மரத்தை அகற்றுவதாக கூறினர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

4 நாட்களாகியும் மரம் அகற்றப்படாமலும், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமலும் உள்ளது.இதனால் பூங்காவை பயன்படுத்த முடியாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுத்து பூங்காவில் சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொண்டு பயன்பாட்டிற்கு பூங்காவை திறக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story