ஆர்.எஸ்.புரத்தில்: துணிக்கடையில் தீ விபத்து


ஆர்.எஸ்.புரத்தில்: துணிக்கடையில் தீ விபத்து
x
தினத்தந்தி 20 Nov 2018 4:00 AM IST (Updated: 20 Nov 2018 5:12 AM IST)
t-max-icont-min-icon

கோவை ஆர்.எஸ்.புரத்தில் துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராடி அணைத்தனர்.

கோவை, 

திருப்பூரை சேர்ந்த ரத்தினகுமார் என்பவர் கோவை ஆர்.எஸ்.புரம் சண்முகம் வீதியில் ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து துணி மற்றும் விளையாட்டு பொம்மைகள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இங்கு வியாபாரிகளுக்கு மொத்தமாக துணிகள் மற்றும் பொம்மைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் நேற்று மதியம் இந்த கடையில் பணி புரிந்த ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சாப்பிடுவதற்காக வெளியே சென்றனர்.

அப்போது கடையில் இருந்து புகை வெளியே வந்துள்ளது. இதனை பார்த்த பக்கத்து கடைக்காரர்கள் உடனடியாக கோவை வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கும், கடை ஊழியர்களுக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் துணிக்கடை என்பதால் தீ மளமளவென எரிந்தது. மேலும் பிளாஸ்டிக் பொம்மைகள் தீயில் உருகின. இதன் காரணமாக கரும்புகை வெளியானதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு தீயணைப்பு வாகனம் கூடுதலாக வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி முடுக்கி விடப்பட்டது. சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் கடையில் இருந்த துணிகள், விளையாட்டு பொருட்கள் எரிந்து நாசமாகின. மின்சார கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தை பார்த்தவர்கள் கூறுகையில், தீ பிடித்த கடையின் அனைத்து ஜன்னல் பகுதிகளும் அட்டை வைத்து மூடப்பட்டு இருந்தன. இதனால் தீயை அணைக்க வழியின்றி தீயணைப்பு வீரர்கள் தவித்தனர். பின்னர் அவர்கள் சுத்தியல், கடப்பாரை உள்ளிட்டவற்றை கொண்டு ஜன்னலை உடைத்து, அதன்வழியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது, என்றனர்.

Next Story