ஊட்டியின் இயற்கை அழகை பாதுகாக்க வேண்டும்: பள்ளி மாணவர்கள் மத்தியில் நடிகர் விவேக் பேச்சு


ஊட்டியின் இயற்கை அழகை பாதுகாக்க வேண்டும்: பள்ளி மாணவர்கள் மத்தியில் நடிகர் விவேக் பேச்சு
x
தினத்தந்தி 21 Nov 2018 4:00 AM IST (Updated: 20 Nov 2018 10:20 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியின் இயற்கை அழகை பாதுகாக்க வேண்டும் என்று பள்ளி மாணவர்கள் மத்தியில் நடிகர் விவேக் கூறினார்.

ஊட்டி,

தமிழகம் முழுவதும் வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதனை மீறி பயன்படுத்துவோர் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், பள்ளி மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் நடிகர் விவேக் கலந்துகொண்டு கூறிய தாவது:-

நீலகிரி மாவட்டத்தை உலகளவில் உயிர்ச்சூழல் மண்டலமாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்து உள்ளது. ஆரம்ப காலத்தில் நீலகிரி மிக அழகான இடமாகவும், வனவிலங்குகள், பறவைகள் மற்றும் உயிரினங்கள் வாழும் பகுதியாகவும் திகழ்ந்தது. தற்போது சிறிது, சிறிதாக இயற்கை அழகை இழந்து வருகிறது. இதற்கு காரணம் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதே ஆகும். ஊட்டியின் இயற்கை அழகை பாதுகாக்க வேண்டும். பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் மண்ணில் மக்குவதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது.

இந்த பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டு ஆடு, மாடுகள் உயிரிழந்து வருகின்றன. அழகான, குளிர்ச்சியான தட்பவெப்பநிலை நிலவும் ஊட்டியில் பிளாஸ்டிக் பொருட்களை வீசக்கூடாது. அதனை குப்பை தொட்டியில் போட வேண்டும். பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோரிடம் கடைக்கு செல்லும் போது துணிப்பைகளை எடுத்து செல்லும்படி கூற வேண்டும். பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் வாங்கி வந்தால், அதனை வாங்கமாட்டோம், பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியாக சொல்ல வேண்டும்.

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வெளியூர்களில் இருந்து கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களை ஆங்காங்கே வீசி செல்கின்றனர். அவ்வாறு வீசக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள் வீசுவதை கண்டால், வெளியில் வீசக்கூடாது, குப்பை தொட்டியில் போட வேண்டும் என்று மாணவர்கள் கூற வேண்டும். நீலகிரி மாவட்டத்தின் சுகாதாரத்தை பாதுகாக்க கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்த வலியுறுத்தும் வகையில், பள்ளி மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டது. முன்னதாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக ஆயிரம் மரக்கன்றுகள் ஊட்டி அருகே கவரட்டி கிராமத்தில் நடவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில், ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊட்டி சேரிங்கிராசில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா முன்னிலை வகித்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு, ரோஜா பூ வழங்கப்பட்டது. இருசக்கர வாகனம் ஓட்டுபவர், பின்னால் இருப்பவர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் ஹெல்மெட் அணிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோபி, தம்பிதுரை, தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம், துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி உள்பட பலர் பங்கேற்றனர். 

Next Story