தலையில் கல்லை போட்டு சமையல்காரர் கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - கோவை கோர்ட்டு தீர்ப்பு


தலையில் கல்லை போட்டு சமையல்காரர் கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - கோவை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 21 Nov 2018 3:30 AM IST (Updated: 20 Nov 2018 10:40 PM IST)
t-max-icont-min-icon

தலையில் கல்லை போட்டு சமையல்காரரை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

கோவை, 


திருச்சி மாவட்டம் கருப்பூரை சேர்ந்தவர் செல்வராஜ், சமையல்காரர். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கோவையில் தங்கி இருந்து பல்வேறு இடங்களுக்கு சமையல் வேலைக்கு சென்று வந்தார். தினமும் வேலை முடிந்து இரவில் கோவை அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள நடைபாதை பகுதியில் படுத்து தூங்குவது வழக்கம்.திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (40). தொழிலாளியான இவரும் கோவையில் பல்வேறு இடங்களுக்கு கூலி வேலைக்கு சென்றுவிட்டு இரவில் அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள நடைபாதை பகுதியில் படுத்து தூங்குவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந்தேதி, செல்வராஜ் தினமும் படுக்கும் இடத்தில் சீனிவாசன் படுத்திருந்ததாக தெரிகிறது. இதனால் செல்வராஜ், அவரிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த சீனிவாசன் அருகில் கிடந்த கல்லை எடுத்து செல்வராஜின் தலையில் போட்டார். மேலும் கல்லால் கழுத்து பகுதியிலும் தாக்கினார். இதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி சீனிவாசனை கைது செய்து, கோவை சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கோவை முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகரன், கொலை செய்த சீனிவாசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Next Story