வேதாரண்யத்தில் நீடிக்கும் துயரம்: புயல் நிவாரண முகாம்களில் மக்கள் குவிந்தனர்


வேதாரண்யத்தில் நீடிக்கும் துயரம்: புயல் நிவாரண முகாம்களில் மக்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 21 Nov 2018 4:45 AM IST (Updated: 21 Nov 2018 12:14 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில் உள்ள புயல் நிவாரண முகாம்களில் மக்கள் குவிந்து வருகிறார்கள். குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். நேற்று 5-வது நாளாக துயரம் நீடித்தது.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை ‘கஜா’ புயல் வேட்டையாடியதில் கடலோர கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள், தோட்டங்கள் மற்றும் உடைமைகளை இழந்து விட்ட மக்களுக்காக வேதாரண்யம் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த முகாம்களில் குடும்பம், குடும்பமாக குவியும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக எவ்வளவு உணவு தயாரித்தாலும், குடிநீர் வினியோகம் செய்தாலும் பற்றாக்குறையே நீடிக்கிறது. பல முகாம்களில் குடிநீர் கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

புயல் கரையை கடந்து 5 நாட்களாகி விட்ட பின்னரும் வேதாரண்யம் பகுதி மக்களின் துயரம் குறையவே இல்லை. நாளுக்கு நாள் துயரம் நீடித்து செல்கிறது.

வேதாரண்யம் பகுதியில் உள்ள எந்த கிராமங்களுக்கு சென்றாலும், “எங்கள் பகுதிக்கு அதிகாரிகள் வரவில்லை, நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை” என்று மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். கடைகள் திறக்கப்படாததால் அத்தியாவசிய பொருட்கள் தேவைக்கு அரசை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய சூழல் கிராமங்களில் நிலவுகிறது.

புயலால் முற்றிலும் உருக்குலைந்து விட்ட வேதாரண்யம் பகுதியில் மின்கம்பங்களை சீரமைத்தல், முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.

பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அரசு பணியாளர்கள் 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் நிவாரண பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். மின்கம்பங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் நேற்று வேதாரண்யத்தில் காலை முதல் விட்டு, விட்டு மழை பெய்தது.

அரை மணி நேர இடைவெளியில் மழை பெய்து கொண்டே இருந்ததால் மின்கம்பங்கள் சீரமைப்பு பணி கடுமையாக பாதிக்கப்பட்டது. பல இடங்களில் மின் ஊழியர்கள் கொட்டும் மழையிலும் பணிகளை கைவிடாமல் தொடர்ந்து மேற்கொண்ட வண்ணம் இருந்தனர்.

மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் வேதாரண்யம் தாலுகா பகுதியில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நேற்று 6-வது நாளாக இருளில் மூழ்கி இருந்தன. இந்த நிலையில் பெய்து வரும் மழை, மின்சாரம் வருவதை மேலும் தாமதப்படுத்தும் என்பதால் மக்கள் கவலையில் உள்ளனர்.

வேதாரண்யம் பகுதியில் புயலால் செல்போன் கோபுரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. இவற்றை சீரமைக்க மேலும் பல நாட்கள் ஆகும் என தெரிகிறது. தற்சமயம் பி.எஸ்.என்.எல். சேவை மட்டுமே ஓரளவுக்கு சீராக இயங்கி வருகிறது. இதிலும் சிக்னல் கோளாறு ஏற்பட்டு சில நேரங்களில் தொடர்பு கிடைப்பதில்லை.

இந்த நிலையில் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலை தொடர்பு நிறுவனங்கள் மூலம் வேதாரண்யம் பகுதிக்கு நடமாடும் செல்போன் கோபுரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. நடமாடும் செல்போன் கோபுரங்களை செயல்பட வைப்பதற்கான பணி நேற்று நடந்தது. இதனால் தொடர்பு சேவை விரைவில் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story