சேரன்மாதேவி அருகே பயங்கரம்: கூட்டுறவு வங்கி ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


சேரன்மாதேவி அருகே பயங்கரம்: கூட்டுறவு வங்கி ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Nov 2018 10:00 PM GMT (Updated: 20 Nov 2018 7:30 PM GMT)

சேரன்மாதேவி அருகே கூட்டுறவு சங்க ஊழியரை சரமாரி வெட்டிக் கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேரன்மாதேவி, 

சேரன்மாதேவி அருகே கூட்டுறவு சங்க ஊழியரை சரமாரி வெட்டிக் கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கூட்டுறவு வங்கி ஊழியர்

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள வெள்ளாங்குழி கிராமம் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலை முத்துமணி. இவருடைய மகன் இசக்கி சங்கர் (வயது 33). இவர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி களக்காடு கிளையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

நேற்று காலையில் இசக்கி சங்கர் வழக்கம்போல் அந்த பகுதியில் ஓடும் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார். அங்கு குளித்து விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

வெட்டிக் கொலை

அவர் ஆற்றங்கரையில் நடந்து வந்தபோது, அங்கு வந்த மர்மநபர்கள் அவரை சுற்றி வளைத்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் வெட்டுக்காயமடைந்த இசக்கி சங்கர் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆஷிஷ் ராவத் (சேரன்மாதேவி), ஜாகீர் உசேன் (அம்பை), போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஸ்டீபன் ஜோன்ஸ் (சேரன்மாதேவி), சங்கரேஸ்வரி (முக்கூடல்) மற்றும் அம்பை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

கொலையாளிகளுக்கு வலைவீச்சு

தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு தாமிரபரணி ஆற்றுப்பகுதியை சுற்றி வந்தது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. பின்னர் இசக்கி சங்கரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பயங்கர கொலை குறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். கூட்டுறவு வங்கி ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story