அரசியல் பாகுபாடு காரணமாக 7 பேர் விடுதலை தாமதம்: நளினி-முருகனை சந்தித்தபின் வக்கீல் புகழேந்தி பேட்டி


அரசியல் பாகுபாடு காரணமாக 7 பேர் விடுதலை தாமதம்: நளினி-முருகனை சந்தித்தபின் வக்கீல் புகழேந்தி பேட்டி
x
தினத்தந்தி 21 Nov 2018 3:15 AM IST (Updated: 21 Nov 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேர் விடுதலையில் அரசியல் பாகுபாடு உள்ளதாக கருதுகிறோம் என வேலூர் ஜெயிலில் நளினி-முருகனை சந்தித்தபின் வக்கீல் புகழேந்தி தெரிவித்தார்.

வேலூர், 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி மத்திய பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஜெயிலில் 10 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் கைதிகளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இதில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்று வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேர் நேற்று முன்தினம் முன் கூட்டி விடுதலை செய்யப்பட்டனர். இந்த விடுதலை சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் ஆகியோரை வக்கீல் புகழேந்தி நேற்று சந்தித்து பேசினார். பின்னர் அவர் பெண்கள் ஜெயிலுக்கு சென்று நளினியையும் சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேர் விடுதலையை வரவேற்கிறோம். அதேபோல் எங்களையும் தமிழக அரசு விடுதலை செய்யும் என்ற நம்பிக்கை உள்ளதாக நளினி உள்பட 3 பேரும் தெரிவித்த னர். 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னரிடம் பரிந்துரை கடிதம் நிலுவையில் இருக்கும் பட்சத்தில் 3 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க சாதி, மதம், பார்க்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

ஆனால் 7 பேர் விடுதலையில் அரசியல் பாகுபாடு உள்ளதாக கருதுகிறோம். அரசியல் பாகுபாடு காரணங்களுக்காக 7 பேர் விடுதலை தாமதப்படுகிறது. விடுதலை தொடர்பாக அவர்களுடன் ஆலோசனை நடத்தினேன். மூத்த வக்கீல்கள் ஆலோசனைப்படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நளினி ரூ.1000 நிவாரணம் வழங்கி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story