கஜா புயல் தாக்கத்தால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவிப்பு


கஜா புயல் தாக்கத்தால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவிப்பு
x
தினத்தந்தி 20 Nov 2018 10:45 PM GMT (Updated: 20 Nov 2018 7:36 PM GMT)

கஜா புயல் தாக்கம் காரணமாக ஏற்பட்ட மின் தடையால் ராமநாதபுரத்திற்கு காவிரி குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,

வங்கக் கடலில் உருவான கஜா புயல் கரையை கடந்தபோது நாகை, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் தப்பியது என்றாலும் புயலின் கோர தாண்டவத்தால் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக திருச்சி முக்கொம்பில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் புதுக்கோட்டை பகுதியில் இருந்து தான் பம்பிங் செய்யப்பட்டு ராமநாதபுரம் வருகிறது. கஜா புயல் காரணமாக புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த 4 நாட்களாக இந்த பகுதிகளில் மின் மோட்டார் இயக்கப்படாததால் தண்ணீர் வினியோகம் தடைபட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக காவிரி குடிநீர் வினியோகிக்கப்படாததால் பொது மக்கள் குடிநீருக்காக அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் தண்ணீர் எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இது குறித்து குடிநீர் வாரிய செயற்பொறியாளர் மாரியிடம் கேட்டபோது, மின் சப்ளை தொடங்கி தண்ணீர் வினியோகம் தொடங்கி விட்டதாகவும், தண்ணீர் ராமநாதபுரம் வந்து சேர்ந்து மேல்நிலை தொட்டியில் ஏற்றப்பட்டு வருவதால் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.


Next Story