சென்னை சவுகார்பேட்டையில் தங்க நகை சீட்டு நடத்தி ரூ.70 லட்சம் மோசடி பைனான்சியர் கைது


சென்னை சவுகார்பேட்டையில் தங்க நகை சீட்டு நடத்தி ரூ.70 லட்சம் மோசடி பைனான்சியர் கைது
x
தினத்தந்தி 21 Nov 2018 3:15 AM IST (Updated: 21 Nov 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சவுகார்பேட்டையில் தங்க நகை சீட்டு நடத்தி ரூ.70 லட்சம் மோசடி செய்த பைனான்சியர் கைது செய்யப்பட்டார்.

பிராட்வே,

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் கியான்சந்த் பண்டாரி (வயது 42). இவர் அப்பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவர் ராஜஸ்தானை சேர்ந்தவர். சவுகார்பேட்டையில் தங்க நகை சீட்டு நடத்தி வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு கொடுங்கையூரை சேர்ந்த இரும்பு வியாபாரியான அப்துல் ராகுல்கான் தனது நண்பர் மூலமாக கியான்சந்த் பண்டாரியை சந்தித்து தங்க நகை சீட்டு குறித்து கேட்டுள்ளார். அப்போது ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் தங்க நாணயம் இலவசம் என தெரிவித்துள்ளார். இதை நம்பிய அப்துல் ராகுல்கான் ரூ.10 லட்சம் முதலீடு செய்தார். மேலும் தனது நண்பர்கள் 6 பேரிடமும் இந்த சீட்டு குறித்து தெரிவித்து தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.60 லட்சம் முதலீடு செய்யவைத்தார்.

பணத்தை பெற்று கொண்ட கியான்சந்த் பண்டாரி 706 கிராம் மதிப்புள்ள தங்க கட்டியை அப்துல் ராகுல்கானிடம் கொடுத்து, அவருடைய நண்பர்கள் தங்க நாணயம் கேட்டால் கொடுத்து விடும்படி கூறியுள்ளார். தங்க கட்டியை வாங்கிய அப்துல் ராகுல்கான் அதை சோதனை செய்தபோது அது தாமிரத்தால் உருவாக்கப்பட்ட கட்டி என்பதும், அதில் வெறும் 0.96 கிராம் மட்டுமே தங்கம் இருந்ததும் தெரியவந்தது.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்துல் ராகுல்கான் நண்பர்களுடன் சென்று கியான்சந்த் பண்டாரியிடம் தாங்கள் கொடுத்த ரூ.70 லட்சத்தை திருப்பி கேட்டுள்ளார். பணத்தை தருவதாக கூறி அவர் காலம் கடத்தியதால் இது குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அப்துல் ராகுல்கான் புகார் செய்தார்.

புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டதை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், கியான்சந்த் பண்டாரியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் தனது மனைவி சங்கீதாவுடன் சேர்ந்து பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. உடனடியாக அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவான அவருடைய மனைவி சங்கீதாவை பிடிக்க தனிப்படை போலீசார் ராஜஸ்தான் விரைந்துள்ளனர்.

Next Story