கடலூர் அருகே கடல் சீற்றம்: படகு மூழ்கியதால் ஆழ்கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு


கடலூர் அருகே கடல் சீற்றம்: படகு மூழ்கியதால் ஆழ்கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு
x
தினத்தந்தி 21 Nov 2018 3:30 AM IST (Updated: 21 Nov 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

கடல் சீற்றத்தால் ஆழ்கடலில் தாழங்குடா மீனவர்களின் படகு மூழ்கியது, கடலில் தத்தளித்த 5 மீனவர்களை மற்றொரு படகில் வந்தவர்கள் பத்திரமாக மீட்டனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர், 

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் கடலூரை அடுத்த தாழங்குடாவைச்சேர்ந்த மீனவர்கள் மாசிலாமணி(வயது40) பாரதி(36), பார்த்தசாரதி(32), கலைசெல்வன்(30), பிரகலாதன்(28) ஆகிய 5 மீனவர்களும் ஆழ்கடலில் வஞ்சிரம் மீன்பிடிப்பதற்காக கட்டுவலை எடுத்துக்கொண்டு நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் மாசிலாமணியின் பைபர் படகில் புறப்பட்டுச்சென்றனர்.

இரவு சுமார் 7 மணி அளவில் அவர்கள் படகு கடற்கரையில் இருந்து 18 நாட்டிகல் மைல் தொலைவில் ஆழ்கடலில் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. கடலில் ஆக்ரோஷமாக சீறியெழுந்த அலைகள், படகை மூழ்கடிப்பது போல் பொங்கி வந்தன.

அதனால் படகுக்குள் தண்ணீர் நிரம்பியது. எனவே இனிமேல் கரைக்கு திரும்ப முடியாது என்று உணர்ந்த 5 மீனவர்களும், அப்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த விசைப்படகுக்காரர்களிடம் உதவி கேட்பதற்காக ‘டார்ச் லைட்’ வெளிச்சத்தை காண்பித்து சிக்னல் கொடுத்தனர்.

‘டார்ச் லைட்’ வெளிச்சத்தை பார்த்ததும் அவர்களை நோக்கி ஒரு விசைப்படகு வந்தது. உடனே தாழங்குடா மீனவர்கள் அந்த விசைப்படகை நோக்கி தங்கள் படகை செலுத்தினார்கள். அதற்குள் படகு மூழ்கும் நிலைக்கு சென்றதால் 5 பேரும் ‘லைப்ஜாக்கெட்டை’ அணிந்து கடலுக்குள் குதித்தனர் பின்னர் அவர்கள் தங்கள் படகை பிடித்துக்கொண்டே ‘டார்ச் லைட்’ வெளிச்சம் மூலம் விசைபடகுக்கு சிக்னல் கொடுத்துக்கொண்டே இருந்தனர்.

சிறிது நேரத்தில் விசைப்படகு, ‘டார்ச்லைட்’ வெளிச்சம் நோக்கி வந்து விசைப்படகில் இருந்தவர்கள் கடலில் தத்தளித்த 5 மீனவர்களையும் மீட்டனர். மீட்கப்பட்ட 5 மீனவர்களும் பதற்றத்துடன் இருந்ததால் மேற்கொண்டு பயணம் செய்யவேண்டாம் என்பதற்காக நங்கூரம் பாய்ச்சி விசைப்படகை கடலில் நிலை நிறுத்தினார்கள். இதற்கிடையே தாழங்குடா மீனவர்களின் கண் எதிரிலேயே அவர்களின் படகு கட்டுவலையுடன் கடலுக்குள் மூழ்கியது. அந்த படகு மற்றும் கட்டுவலையின் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பொழுதுவிடிந்ததும் நேற்று அதிகாலையில் 5 மீனவர்களும் செல்போன் மூலம் தாழங்குடாவில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தாழங்குடாவில் உள்ள அவர்களின் உறவினர்கள் படகுகளில் கடலுக்கு சென்று 5 மீனவர்களையும் பத்திரமாக ஏற்றிக்கொண்டு நேற்று காலை 7 மணி அளவில் கரைக்கு திரும்பினார்கள்.

இது பற்றி தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் சங்கீதா, சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் ஆகியோர் தாழங்குடாவுக்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இது பற்றி சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் கூறுகையில், கடல் சீற்றத்தின் காரணமாக படகு மூழ்கியதால் கடலில் தத்தளித்த 5 மீனவர்களையும் கடலூர் துறைமுகத்தை சேர்ந்த அரசன் என்ற படகில் வந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். இன்று(அதாவது நேற்று) காலை 7 மணி அளவில் 5 மீனவர்களும் பத்திரமாக கரை திரும்பினார்கள் என்றார்.


Next Story