சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம்: 2 பஸ்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்


சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம்: 2 பஸ்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 20 Nov 2018 10:00 PM GMT (Updated: 20 Nov 2018 8:32 PM GMT)

சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதை கண்டித்து 2 பஸ்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேடசந்தூர், 

வேடசந்தூர் அருகே உள்ள பாகாநத்தம் ஊராட்சி மலைப்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதிகளில் ‘கஜா’ புயலின்போது வீசிய பலத்த காற்றால் மின்கம்பங்கள் பல சேதமடைந்தன. இதையடுத்து சீரமைக்கும் பணியில் மின் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மின்சாரம் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதையொட்டி கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் டிராக்டரில் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று டிராக்டரில் வினியோகம் செய்யப்பட்ட தண்ணீர் சுகாதாரமற்ற முறையில் இருந்ததாக கூறப்படுகிறது. குடிக்க கூட முடியாத அளவுக்கு மிகவும் கலங்கலாக இருந்தது. கல்குவாரி குட்டையில் தேங்கிய மழைநீரை பிடித்து வந்து வினியோகம் செய்வதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

இதற்கிடையில் தங்களுக்கு முறையாக சுத்தமான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி அப்பகுதியில் 2 பஸ்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் எரியோடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.
இதனையடுத்து வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி கூறினர். இதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story