மணப்பாறை பகுதியில் குடிநீர், மின்வசதி கோரி 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்


மணப்பாறை பகுதியில் குடிநீர், மின்வசதி கோரி 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 Nov 2018 4:15 AM IST (Updated: 21 Nov 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை பகுதியில் குடிநீர் மற்றும் மின்வசதி வழங்க கோரி 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மணப்பாறை,

மணப்பாறை பகுதியில் கஜா புயல் பாதிப்பால் பல்வேறு கிராமங்களில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மரங்கள் வேரோடு சாய்ந்து கிடப்பதுடன், மின் கம்பங்களும் முழுமையாக சேதமடைந்து விட்டன. மின்கம்பிகளும் அறுந்து விழுந்து கிடக்கின்றன. பல்வேறு இடங்களில் வீடுகளும் முழுமையாக சேதமடைந்தன. இதுவரை மணப்பாறை பகுதி மக்கள் இதுபோன்ற புயல் பாதிப்பை கண்டதில்லை. எதிர்பாராத நிலையில் புயல் தாக்கியதால் ஏற்பட்ட பெரும் சேதத்தால் கடந்த 5 நாட்களாக பல்வேறு இடங்களிலும் மின்தடை ஏற்பட்டுள்ளது.

தங்கள் பகுதியில் மின்சாரம் இல்லை, குடிநீர் இல்லை என்று கூறி தொடர்ந்து 4 நாட்களாக பொதுமக்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மணப்பாறை நகராட்சியின் தாய் கிராமமான செவலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பனந்தோப்பு பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் சேத மதிப்பை கணக்கிட அதிகாரிகள் வரவில்லை என்று கூறப்படுகிறது. மின் வினியோகம் வழங்காத நிலையில் குடிநீர் கூட இன்றி கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மணப்பாறை பனந்தோப்பு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது தங்கள் பகுதிதான் மணப்பாறை நகராட்சியின் தாய் கிராமமாக இருந்தாலும், இதுவரை அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கக்கூட இல்லை. ஆகவே உடனடியாக தங்கள் பகுதியை பார்வையிட்டு மின்சாரம் வழங்க வேண்டும். குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மின்கம்பி அறுந்து கிடப்பது கூட தெரியாமல் மின்சாரம் வழங்கியதால் பெண் ஒருவரை மின்சாரம் தாக்கியதை கண்டித்தும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உடனடியாக மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து, பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதேபோல் விராலிமலை சாலையில் உள்ள லெட்சுமிபுரம் பகுதியில் மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கவில்லை என்று கூறி மக்கள் விராலிமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் மின்வாரிய செயற்பொறியாளர் அன்புச் செல்வன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மின் இணைப்புகளை சரி செய்யும் பணிகள் தொடங்கியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

விராலிமலை சாலையில் உள்ள பாரதியார் நகர் மக்கள், பஸ் நிறுத்தம் அருகே குடிநீர், மின்சாரம் வழங்க வலியுறுத்தி மரக்கிளைகளை போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய ஒன்றியங்களில் உள்ள கிராமங்களும், துவரங்குறிச்சியை உள்ளடக்கிய பொன்னம்பட்டி பேரூராட்சி பகுதியும் தான் அதிக அளவில் புயல் பாதிப்புக்குள்ளானது. ஆனால் புயல் பாதிப்பு மிகவும் குறைந்தே இருப்பதை போல், அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு செய்யவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

Next Story