நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் கே.என்.நேரு பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் கே.என்.நேரு பேச்சு
x
தினத்தந்தி 20 Nov 2018 10:45 PM GMT (Updated: 20 Nov 2018 8:50 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று கே.என்.நேரு கூறினார்.

மலைக்கோட்டை,

திருச்சி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் ஏ.கே.எஸ்.விஜயன், சச்சிதானந்தம், எம்.எல்.ஏக்கள் பெரியண்ணன் அரசு, மகேஷ் பொய்யாமொழி மற்றும் செல்லப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கே.என்.நேரு பேசியதாவது;-

தி.மு.க.விற்கு தலைமை தாங்க ஸ்டாலின் ஒருவருக்கே தகுதி உள்ளது. ஸ்டாலின் இல்லை என்றால் தி.மு.க.வை வழிநடத்த ஆள் இல்லை. நேர்மையாக தேர்தல் நடந்தபோது தி.மு.க.வினர் பல்வேறு பதவிகள் வகித்தனர். ஆனால் தற்போது நியாயமாக, நேர்மையாக கிடைக்க வேண்டிய எந்த பதவியும் தி.மு.க.வினருக்கு கிடைப்பதில்லை. தேர்தலின்போது அ.தி.மு.க. பணம் கொடுக்கலாம். ஆனால் அவர்களிடத்தில் ஒற்றுமை இல்லை. 3 அணியாக பிரிந்து கிடக்கின்றனர். எனவே அ.தி.மு.க. வினர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் தி.மு.க.தான் வெற்றி பெறும்.

தமிழக முதல்- அமைச்சர், கஜா புயல் சேதத்தை சாலை வழியாக சென்று பார்க்காமல், ஹெலிகாப்டரில் சென்று பார்க்கிறார். பறந்து கொண்டு பார்த்தால் என்ன தெரியும். சிறுபான்மையினர் தி.மு.க.விற்கு எதிராக வாக்களித்தால் அது அவர்களுக்கே செய்து கொள்ளும் கேடு. இது அவர்களுக்கே தெரியும். வரும் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் தி.மு.க.வை வெற்றி பெற செய்ய அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;-

கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களுக்கு உணவு, உடை, மருந்து உள்ளிட்ட பொருட்களை கொடுத்து உதவிட அனைத்து தரப்பு பொதுமக்களும் முன்வர வேண்டும். கஜா புயலின் காரணமாக நெல், கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட ஏராளமான விளை நிலங்களும், வீடுகளும் முற்றிலும் சேதமடைந்து, விவசாயிகளும், பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண தொகையை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க உயர்த்தி வழங்க வேண்டும். கட்சி தோழர்கள், தொழிலதிபர்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுநல மன்றங்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும், கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு தேவையான உணவு, உடை, மருந்துகள், குடிநீர்பாட்டில்கள், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும், ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திரட்டப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் தி.மு.க. தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் பா.ம.க. வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அக்கட்சியில் இருந்து விலகி கே.என்.நேரு முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

Next Story