விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை வழங்காத சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை வழங்காமல் இருக்கும் சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு,
விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை வழங்காமல் இருக்கும் சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நடவடிக்கை எடுக்க வேண்டும்
மாநிலத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் நிலுவைத்தொகையை வழங்காமல் இருக்கிறது. இதனால் விவசாயிகள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்களிடம் இருந்து உடனடியாக நிலுவைத்தொகையை பெற்று விவசாயி களிடம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவைத்தொகையை வழங்க மறுக்கும் சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்கள் மீது மாநில அரசு எந்த விதமான பாரபட்சமும் காட்டாமல் கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த ஆலைகளை நடத்து பவர்கள் எந்த கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அரசு யோசிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால், அரசுக்கு பா.ஜனதா முழு ஆதரவு அளிக்கும். இந்த விவகாரத்தில் விவசாயிகளுக்காக அரசு எடுக்கும் முடிவுகளுக்கு பா.ஜனதா ஆதரவு அளிக்க தயாராக உள்ளது. அதனால் சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்களிடம் இருந்து நிலுவைத்தொகையை பெற்று விவசாயிகளிடம் கொடுப்பதில், அரசு இன்னும் காலதாமதம் செய்யக்கூடாது.
புள்ளி விவரம் தெரிவிக்க...
மாநிலத்தில் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் நிறைவடையப் போகிறது. ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதில் மாநில அரசு முழுமையாக தோல்வி அடைந்து விட்டது. விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்காத மாநில அரசை கண்டித்து நாளை(அதாவது இன்று) மாநிலம் முழுவதும் பா.ஜனதா சார்பில் போராட்டம் நடத்தப்படும். விவசாய கடனை விரைவில் தள்ளுபடி செய்வதாக முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார். அது அறிவிப்பாக மட்டுமே உள்ளது. விவசாய கடன் தள்ளுபடியை முதல்-மந்திரி நடைமுறைப்படுத்தவில்லை. அதனால் மாநிலத்தில் விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து வருகின்றனர்.
இதுவரை விவசாய கடன் எத்தனை கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது என்பதை புள்ளி விவரமாக தெரிவிக்க முதல்-மந்திரி குமாரசாமி தயாரா?. மாநிலத்தில் 100 தாலுக்காக்களில் வறட்சி நிலவுகிறது. ஆனால் இதுவரை வறட்சியால் பாதித்த எந்த தாலுகாக்களுக்கும் சென்று மந்திரிகள் பார்வையிடவில்லை. அதனால் மாநிலத்தில் நிலவும் வறட்சி, விவசாய கடன் தள்ளுபடி செய்திருப்பதாக பொய் வாக்குறுதி கொடுத்திருப்பது குறித்து பெலகாவியில் நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரில் பிரச்சினை எழுப்பப்படும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story