சேலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள் - 900 பேர் பங்கேற்பு


சேலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள் - 900 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 21 Nov 2018 4:27 AM IST (Updated: 21 Nov 2018 4:27 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் 900 பேர் கலந்து கொண்டனர்.

சேலம்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சேலம் மாவட்ட பிரிவு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவை சார்பில் நேற்று மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியை கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்.

அப்போது போட்டிகளில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளை கலெக்டர் ஊக்கப்படுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், 100 மீட்டர் சக்கர நாற்காலி போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 900 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் ரோகிணி பரிசு வழங்கினார். மேலும் போட்டிகளில் முதலிடம் பிடித்த மாற்றுத்திறனாளிகள் வருகிற 1-ந் தேதி சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

முன்னதாக போட்டியை தொடங்கி வைத்து கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறும் போது, ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வருகிறோம். முதலில் 3 லாரிகளில் பொருட்கள் அனுப்பி உள்ளோம். பின்னர் நாகப்பட்டினத்துக்கு ஒரு லாரியில் பொருட்கள் அனுப்பப்பட்டது. மேலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு என்ன பொருட்கள் தேவையோ அவற்றை அனுப்பி வைக்க இருக்கிறோம். தேவைப்பட்டால் பொதுமக்களிடம் நிவாரண பொருட்கள் சேகரிப்போம்‘ என்றார்.





Next Story