கன்னியாகுமரி எக்ஸ்பிரசை தனி ரெயிலாக இயக்கக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் 24–ந் தேதி ரெயில் மறியல்


கன்னியாகுமரி எக்ஸ்பிரசை தனி ரெயிலாக இயக்கக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் 24–ந் தேதி ரெயில் மறியல்
x
தினத்தந்தி 21 Nov 2018 10:45 PM GMT (Updated: 21 Nov 2018 3:16 PM GMT)

கன்னியாகுமரி எக்ஸ்பிரசை தனி ரெயிலாக இயக்கக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் வருகிற 24–ந் தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்த போவதாக 4 எம்.எல்.ஏ.க்கள் கூறினர்.

நாகர்கோவில்,

தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ., ஆஸ்டின் எம்.எல்.ஏ., நகர செயலாளர் மகேஷ், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசாமி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் 4 எம்.எல்.ஏ.க்களும் கூட்டாக  நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–

குமரி மாவட்டம் திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்துடன் இருப்பதால் ரெயில் போக்குவரத்தில் குமரி மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. திருவனந்தபுரம் சென்ற அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கொல்லம் வரை நீட்டிப்பு செய்தார்கள். இப்போது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கொச்சுவேளிக்கு பயணிகள் ரெயிலாக மாற்றி இயக்குகிறார்கள். இதனால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் சரியான நேரத்துக்கு புறப்பட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே கன்னியாகுமரி எக்ஸ்பிரசை தனி ரெயிலாக இயக்கக்கோரி தி.மு.க. மற்றும் கூட்டணிகள் இணைந்து நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் வருகிற 24–ந் தேதி மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் சரிவர இல்லை. அதாவது சுத்தமான குடிநீர், கழிவறை வசதி ஆகியவை இல்லை. குடிநீரில் கழிவுநீர் கலப்பதாகவும், இதனால் ரெயில் நிலையத்தில் உள்ள குடிநீரை ரெயில்வே ஊழியர்களே குடிப்பது இல்லை என்றும் கூறுகிறார்கள். எனவே இவற்றை கண்டித்தும் இந்த மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story