குன்னூர் சுங்கச்சாவடி பகுதியில்: விதிகளை மீறும் வாகனங்களால் விபத்து அபாயம்


குன்னூர் சுங்கச்சாவடி பகுதியில்: விதிகளை மீறும் வாகனங்களால் விபத்து அபாயம்
x
தினத்தந்தி 21 Nov 2018 10:00 PM GMT (Updated: 21 Nov 2018 6:09 PM GMT)

குன்னூர் சுங்கச்சாவடி பகுதியில் விதிகளை மீறும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி,

தேனி அருகே குன்னூர் பகுதியில் வாகன சுங்கச்சாவடி செயல்படாமல் உள்ளது. இந்த வழியாக வரும் வாகனங்கள், சுங்கச்சாவடியில் அமைக்கப்பட்டுள்ள 6 வழித்தடங்கள் வழியாக சென்று வருகின்றன. இந்த சுங்கச்சாவடிக்குள் வாகனங்கள் மெதுவாக செல்லும் வகையில் இருபுறமும் வேகத்தடைகள் உள்ளன.

சுங்கச்சாவடியில் உள்ள 6 நுழைவு வாயிலில் இடது புறம் உள்ள 3 வாயில் வழியாக தேனியில் இருந்து மதுரை செல்லும் வாகனங்களும், வலதுபுறம் உள்ள 3 வாயில் வழியாக மதுரையில் இருந்து தேனி செல்லும் வாகனங்களும் சென்று வருகிறது. இருபுறமும் அமைக்கப்பட்ட வேகத்தடைகள் வழியாக வாகனங்கள் மெதுவாக செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஆனால் அந்த வழியாக வருகிற எந்த வாகனங்களும் வேகத்தடையில் ஏறி செல்வதில்லை. மாறாக விதிகளை மீறி வேறு வழியாக சென்று வருகின்றன. இருபுறமும் செல்லும் வாகனங்கள், வலதுபுறம் சாலை வழியாக சென்று சுங்கச்சாவடிக்குள் செல்கிறது. இதுபோன்ற விதிமுறைகளை மீறி செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தனியார் பஸ்கள் விதிமீறலில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றன. பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் விதிகளை மீறி செல்லும்போது மோட்டார் சைக்கிளில் செல்வோர், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் சூழல் நிலவுகிறது. சுங்கச்சாவடியில் சாலையின் அகலத்துக்கு ஏற்ப இருபுறமும் வேகத்தடைகளை ஏற்படுத்தி இருந்தால் இதுபோன்ற விதிமீறலில் வாகன ஓட்டிகள் ஈடுபட வாய்ப்பு இல்லை.

எனவே குன்னூர் சுங்கச்சாவடி பகுதியில் பெரிய அளவிலான விபத்துகள் ஏற்படுவதற்கு முன்னதாக, சாலையின் இருபுறத்திலும் வேகத்தடையை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story