கரும்பு விவசாயிகள் பிரச்சினையை கையில் எடுத்து பா.ஜனதாவினர் அரசியல் செய்கிறார்கள் பரமேஸ்வர் குற்றச்சாட்டு
கரும்பு விவசாயிகள் பிரச்சினையை கையில் எடுத்து பா.ஜனதாவினர் அரசியல் செய்கிறார்கள் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் குற்றம்சாட்டி உள்ளார்.
பெங்களூரு,
கரும்பு விவசாயிகள் பிரச்சினையை கையில் எடுத்து பா.ஜனதாவினர் அரசியல் செய்கிறார்கள் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் குற்றம்சாட்டி உள்ளார்.
துமகூருவில் நேற்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதாவுக்கு தகுதியில்லை
கரும்பு விவசாயிகள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத்தொகையை சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்களிடம் இருந்து பெற்றுக் கொடுக்கும்படி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதற்காக சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்கள், கரும்பு விவசாயிகள் ஆகியோருடன் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்களிடம் இருந்து கண்டிப்பாக நிலுவைத்தொகை பெற்றுக் கொடுக்கப்படும் என்று அவர் உறுதியும் அளித்துள்ளார். அதற்கான நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும்.
மத்திய அரசு கரும்புக்கு விலையை நிர்ணயிக்க வேண்டும். கரும்பு விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு முன்வர வேண்டும். ஆனால் கரும்பு விவசாயிகளுக்கும், தங்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று மத்திய அரசு அமைதியாக இருந்து வருகிறது. மத்தியில் பா.ஜனதா தான் ஆட்சியில் உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் கர்நாடகத்தில் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி பேச பா.ஜனதாவுக்கு தகுதியில்லை.
அரசியல் செய்கிறார்கள்
விவசாயிகள் மீது உண்மையிலேயே பா.ஜனதாவுக்கு அக்கறை கிடையாது. தற்போது கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவதால், அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக பா.ஜனதாவினர் காட்டிக் கொள்கிறார்கள். கூட்டணி அரசு மீது ஏதாவது குற்றச்சாட்டுகளை கூற வேண்டும் என்பதற்காக கரும்பு விவசாயிகளின் பிரச்சினையை கையில் எடுத்து பா.ஜனதாவினர் அரசியல் செய்கிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பதாக காட்டிக் கொள்கிறார்கள்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த போது கரும்புக்கு ரூ.450 ஆதரவு விலை வழங்கி உத்தரவிட்டார். கரும்பு விவசாயிகள் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக பெலகாவி சுவர்ணசவுதாவில் நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரில் முக்கிய முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.
Related Tags :
Next Story