கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் நேரில் ஆய்வு


கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 22 Nov 2018 4:45 AM IST (Updated: 22 Nov 2018 12:06 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தை தாக்கிய கஜா புயல் நாகை மாவட்டத்தில் மிக கடுமையான சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இங்கு பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

நாகப்பட்டினம்,

புயல் தாக்கி 6 நாட்களாகியும் தற்போது வரை பெரும்பாலான கிராமங்கள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கி கிடக்கின்றன.

மேல்நிலை தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப முடியாமல் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று நாகை வந்தார். சென்னையில் இருந்து காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் காலை 5 மணிக்கு நாகை வந்த கவர்னர் சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுத்தார்.

கவர்னரை தலைவராக கொண்ட தமிழ்நாடு செஞ்சிலுவை சங்கம் சார்பாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட சுமார் 4,500 குடும்பங்களுக்கு வழங்க 10 வாகனங்களில் ரூ.1 கோடி மதிப்புள்ள தார்பாய்கள், பருப்பு, அரிசி, போர்வை, துண்டு, சமையல் எண்ணெய், குடிநீர் பாட்டில்கள் ஆகிய நிவாரண பொருட்களும் கொண்டு செல்லப்பட்டு இருந்தன.

அவற்றை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாகை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். இந்த நிவாரண பொருட்கள் அனைத்தும் தமிழ்நாடு செஞ்சிலுவை சங்கத் தலைவர் ஹர்ஷத் மேத்தாவின் ஒருங்கிணைப்பில் கொண்டு வரப்பட்டவை ஆகும்.

மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு அளிப்பதற்காக சுமார் 10 ஆயிரம் நபர்களுக்கு உணவு சமைக்கும் வகையில் நாகப்பட்டினம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சமையல் கூடத்தையும் கவர்னர் பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக காலை 9.30 மணி அளவில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக கவர்னர் காரில் சென்றார்.

தொடர்ந்து வேளாங் கண்ணி, வேதாரண்யம் சாலை வழியாக காமேஸ் வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காரில் இருந்தபடியே பார்வையிட்டார்.

அங்கிருந்து வெள்ளப்பள்ளம் சென்ற அவர் காரை விட்டு இறங்கி அங்கு சேதமடைந்த வீடுகள், மரங்கள், மின்கம்பங்கள், மின் மாற்றிகள் ஆகியவற்றை பார்வையிட்டார். அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் புயல் சேத பாதிப்புகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து பழங்கள்ளிமேட்டிற்கு சென்றார். அங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அங்கு வைக்கப் பட்டுள்ள உணவு, குடிநீர், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் கவர்னர் பார்வையிட்டார்.

அப்போது அங்கிருந்த பெண்கள் கண்ணீர் மல்க கவர்னரிடம் கூறுகையில் “எங்கள் பகுதியில் உள்ள அனைவரும் கஜா புயலால் வீடுகளை இழந்தும், உடமைகளை இழந்தும் நிர்க்கதியாக இருக்கிறோம். முகாம்களில் உள்ள பெண்கள், குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம். மாற்று துணி கூட இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம். வேலைக்கு செல்லாததால் செலவுக்கு கூட கையில் பணம் இல்லை. வீடுகளை இழந்த எங்கள் அனைவருக்கும் வீடு கட்டித்தர வேண்டும் என்று உருக்கமாக வேண்டுகோள் வைத்தனர்.

அதை கனிவுடன் கேட்ட கவர்னர், “விரைவில் உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” என்றார்.

பின்னர் தோப்புத்துறையில் புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் தென்னந்தோப்புகளை அவர் பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து வேதாரண்யம் சென்ற கவர்னர் பன்வாரிலால் புரோகித், நாகை-வேதாரண்யம் மெயின் ரோடு மகாராஜபுரத்தில் உள்ள முகாமில் தங்கியிருந்த பொதுமக்களை சந்தித்து புயல் பாதிப்புகள் பற்றி கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதையடுத்து, வேதாரண்யம் விஸ்வநாதர் கோவிலில் உள்ள முகாம், அந்தோணியார் பள்ளி, வேதாரண்யம் பகுதிகளில் உள்ள சில முகாம்களுக்கு சென்று அங்கு இருந்தவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் குறித்து கேட்டறிந்தார்.

தோப்புத்துறை அருகே தாதன் திருவாசலில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களுக்கு தார்ப்பாய்களை கவர்னர் வழங்கினார். பின்னர் செம்போடை, நாலுவேதபதி, புஷ்பவனம், வேட்டைக்காரனிருப்பு கடலோர பகுதிகளில் உள்ள முகாம்களில் மருத்துவ முகாம்கள், உணவு தயாரிக்கும் இடங்களையும் அவர் ஆய்வு செய்தார். முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு என சமையல் செய்யும் இடத்திற்கு சென்ற கவர்னர், அவர்களுக்கு வழங்கப்படும் உணவை சோதித்தும் பார்த்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகத்தினர் சிறப்பான முறையில் செய்து வருவது பாராட்டுக்குரியது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய நிவாரணங்கள் உடனடியாக வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

கவர்னருடன் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கவர்னரின் கூடுதல் முதன்மை செயலாளர் ராஜகோபால், கலெக்டர் சுரேஷ்குமார் ஆகியோரும் சென்றிருந்தனர்.

இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுவதற்காக கவர்னர் நாகையில் இருந்து கார் மூலம் திருவாரூர் புறப்பட்டு சென்றார்.

திருவாரூர் சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள கவர்னர், இன்று(வியாழக்கிழமை) காலையில் திருவாரூர் மாவட்டத்திலும், மாலையில் தஞ்சை மாவட்டத்திலும் புயல் சேத பகுதிகளை பார்வையிடுகிறார்.

Next Story