அமைந்தகரை, மயிலாப்பூரில் கஞ்சா விற்ற 5 பேர் கைது
அமைந்தகரை மற்றும் மயிலாப்பூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
சென்னை அமைந்தகரையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையோர பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு அமைந்தகரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது என்.எஸ்.கே.நகர் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்த புளியந்தோப்பை சேர்ந்த ராவணன்(வயது 62), டி.பி.சத்திரத்தை சேர்ந்த ரகு என்ற ரகுகுமார்(45), அமைந்தகரையை சேர்ந்த பாண்டி ராஜேஷ்(20), கருணாகரன் (30) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கைதான 4 பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்கள், கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து அதனை சிறு, சிறு பொட்டலங்களாக மாற்றி கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிந்தது.
இவர்களுக்கு கஞ்சா எப்படி கிடைக்கிறது.?, இவர்களின் முக்கிய கூட்டாளிகள் யார்? என்பது குறித்து அமைந்தகரை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பின்னர் கைதான 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை மயிலாப்பூர் லஸ் அவென்யூ நாகேஷ்வரராவ் பூங்கா அருகே மயிலாப்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்த விருகம்பாக்கம் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த சுப்பிரமணி(47) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.