கஜா புயலால், வீடுகளை இழந்து இருக்க இடமின்றி இடுகாட்டில் தஞ்சமடைந்த மக்கள்


கஜா புயலால், வீடுகளை இழந்து இருக்க இடமின்றி இடுகாட்டில் தஞ்சமடைந்த மக்கள்
x
தினத்தந்தி 22 Nov 2018 4:15 AM IST (Updated: 22 Nov 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை அருகே கஜா புயலால், வீடுகளை இழந்து இருக்க இடமின்றி மக்கள் இடுகாட்டில் தஞ்சமடைந்தனர். இறந்த பிறகு வரவேண்டிய இடத்துக்கு இப்போதே வந்து விட்டோம் என்று வேதனையுடன் கூறினர்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கஜா புயலில் சிக்கி ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. வீடுகளும் தப்பவில்லை. இதனால் அப்பகுதியில் வீடுகளை இழந்த மக்கள் சாலையோரத்திலும் நிவாரண முகாம்களிலும் தங்கி உள்ளனர்.

முத்துப்பேட்டை அருகே உள்ள பின்னத்தூர் பகுதியில் ஏராளமானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். இருக்க இடமின்றி தவித்த அவர்களுக்கு அரசின் ஆதரவு கிட்டவில்லை. இதனால் வீடுகளை இழந்த மக்கள் அருகே உள்ள இடுகாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். புயல் தாக்கிய நாளில் இருந்து அவர்கள் இடுகாட்டிலேயே தங்கியிருந்து சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். இந்த பகுதியை காரில் கடந்து செல்லும் அதிகாரிகளும் இவர்களை கண்டு கொள்ளவில்லை.

இது குறித்து இடுகாட்டில் தங்கி உள்ள மக்கள் கூறியதாவது:-

இருந்த பிறகு வரவேண்டிய இடத்துக்கு...

இறந்த பிறகு வர வேண்டிய இடத்துக்கு இப்போதே எங்களை கஜா புயல் அழைத்து வந்து விட்டது. இடுகாட்டில் தங்கி உள்ள நாங்கள் தினமும் குழந்தைகளுடன் இங்கு விஷ ஜந்துக்களுடன் தங்கி இருந்து அவதிப்பட்டு வருகிறோம்.

நாங்கள் தங்கியுள்ள பகுதியை தினமும் அரசு அதிகாரிகளின் கார் கடந்து செல்கிறது. ஆனால் எங்களை யாரும் கண்டு கொள்ளவில்லை. இன்னும் எத்தனை நாட்களுக்கு எங்களின் இடுகாடு வாசம் தொடரும் என தெரியவில்லை. எனவே வீடுகளை இழந்த எங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story