கஜா புயலால் மின் இணைப்பு துண்டிப்பு தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மெழுகுவர்த்தி தட்டுப்பாடு


கஜா புயலால் மின் இணைப்பு துண்டிப்பு தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மெழுகுவர்த்தி தட்டுப்பாடு
x
தினத்தந்தி 21 Nov 2018 10:45 PM GMT (Updated: 21 Nov 2018 7:14 PM GMT)

கஜா புயலால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மெழுகுவர்த்தி தட்டுப்பாடு நிலவுகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கஜா புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான மின்கம்பங்களும் கீழே விழுந்தன. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சீரமைப்பு பணி காரணமாக ஒரு சில இடங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் இன்னும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

குறிப்பாக கிராமங்களில் மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீடுகளில் மெழுகுவர்த்தி மூலம் அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடைகளில் வியாபாரிகளும் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே வியாபாரத்தை தொடரும் நிலை இருக்கிறது. இதனால் மெழுகுவர்த்தி வாங்குவதற்காக கடைகளுக்கு மக்கள் படையெடுக்கின்றனர்.

இப்படி ஒரே நேரத்தில் மெழுகுவர்த்தியின் தேவை அதிகரித்து இருப்பதால் பல கடைகளில் மெழுகுவர்த்தியே கிடைப்பதில்லை. நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மெழுகுவர்த்தி கிடைக்காததால் வியாபாரிகள் பலர், தஞ்சைக்கு வந்து மொத்தமாக வாங்கி செல்கின்றனர். மேலும் தொண்டு நிறுவனத்தினரும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக மொத்தமாக மெழுகுவர்த்திகளை வாங்கி செல்கின்றனர்.

மூன்று மாவட்டங்களிலும் மெழுகுவர்த்தியின் பயன்பாடு அதிகரித்து இருப்பதால் அதன் விலையும் 2 மடங்கு அதிகரித்துள்ளது. விலை அதிகரித்தாலும் மூன்று மாவட்டங்களிலும் மெழுகுவர்த்திக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. தஞ்சையை அடுத்த பாப்பாநாடு பகுதிகளில் நேற்று தொண்டு நிறுவனத்தினர் மெழுகுவர்த்தியை நிவாரணமாக வழங்கினர். மற்ற பொருட்களை வாங்குவதற்கு கூட்டம் அலைமோதுவதை போல மெழுகுவர்த்தியை வாங்குவதற்கு கிராம மக்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். அந்த அளவுக்கு அவற்றின் தேவை அதிகரித்து இருக்கிறது.

தஞ்சையை சேர்ந்த வியாபாரிகளுக்கு கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் இருந்தும், கும்பகோணம் பகுதியில் இருந்தும் மெழுகுவர்த்தி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தேவை அதிகமாக இருப்பதால் 6 எண்ணிக்கை கொண்ட சிறிய மெழுகுவர்த்தி கொண்ட பாக்கெட் ரூ.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தேவைக்கு ஏற்ப மெழுகுவர்த்தியும் உற்பத்தி செய்ய முடியவில்லை. இது குறித்து மெழுகுவர்த்தி உற்பத்தியாளர் கூறும்போது, வழக்கத்தை விட அதிக அளவு மெழுகுவர்த்தியின் தேவை அதிகரித்து இருப்பதால் வியாபாரிகள் நிறைய ஆர்டர்களை கொடுக்கிறார்கள். அவர்களுக்கு எங்களால் மெழுகுவர்த்தியை உற்பத்தி செய்து கொடுக்க முடியவில்லை. புயலால் பாதித்த மக்களுக்கு வழங்க தொண்டு நிறுவனத்தினர் மொத்தமாக மெழுகுவர்த்தியை வாங்கி செல்கின்றனர்.

ரூ.10, ரூ.15, ரூ.5 மதிப்புள்ள மெழுகுவர்த்தியைத்தான் அதிக அளவு வாங்கி செல்கின்றனர். தினமும் 15 ஆயிரம் மெழுகுவர்த்தி தயாரித்தோம் என்றால் தற்போது 1 லட்சம் மெழுகுவர்த்திக்கு ஆர்டர் வருகிறது. மெழுகுவர்த்தி தயாரிக்க மூலப்பொருட்கள் கிடைக்காததால் தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய முடியவில்லை என்றார்.

தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறும்போது, வழக்கத்தை விட தேவை அதிகமாக இருப்பதால் மெழுகுவர்த்தி தட்டுப்பாடு நிலவுகிறது. ஏற்கனவே விற்ற விலையை விட 2 மடங்கு கூடுதலாக மெழுகுவர்த்தி விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

அதே நேரத்தில் பொதுமக்கள் கூறும்போது, ரூ.5 மதிப்புள்ள மெழுகுவர்த்தி ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் கிடைக்கவில்லை என்றனர்.

கிராமப்புறங்களில் மின்சாரம் வர இன்னும் ஒரு வாரம் வரை கூட ஆகலாம். இதனால் மெழுகுவர்த்தி கடும் தட்டுப்பாடு நிலவுவதுடன் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மின்சாரம் வரும் வரையிலும் மெழுகுவர்த்தி, தீப்பெட்டி கிடைத்தால் போதும் இரவு நேரத்தை சமாளித்து விடுவோம். அதே வேளையில் விரைவில் மின்கம்பங்களை சீரமைத்து மின்வினியோகம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Next Story