புதுவையில் பயங்கரம்: மனைவியுடன் வக்கீல் படுகொலை


புதுவையில் பயங்கரம்: மனைவியுடன் வக்கீல் படுகொலை
x
தினத்தந்தி 22 Nov 2018 12:00 AM GMT (Updated: 21 Nov 2018 7:42 PM GMT)

புதுச்சேரியில் வக்கீல் மனைவியுடன் படுகொலை செய்யப்பட் டார். இந்த இரட்டை கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி நெல்லித்தோப்பு அண்ணாநகர் 14-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது72). வக்கீல். இவரது மனைவி ஹேமலதா(65). பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள். இவர்களுக்கு நாராயணன், சந்தோஷ் என்ற 2 மகன்களும், வைஷ்ணவி என்ற ஒரு மகளும் உள்ளனர்.

மகன்கள் 2 பேரும் பிரான்ஸ் நாட்டிலும், மகள் வைஷ்ணவி சிங்கப்பூரிலும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரின் மகளை பாலகிருஷ்ணனின் மகன் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. புதுவையில் உள்ள 2 அடுக்கு மாடி வீட்டின் தரைத்தளத்தில் வக்கீல் பாலகிருஷ்ணனும் அவரது மனைவியும் வசித்து வந்தனர்.

முதல் தளத்தில் உள்ள வீடு காலியாக உள்ளது. அந்த வீட்டை வாடகைக்கு விடுவதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. 2-வது மாடியில் உள்ள வீட்டில் ஒரு குடும்பத்தினர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரம் ஆகியும் பால கிருஷ்ணனின் வீட்டின் முன்பக்க மின்விளக்கு போடவில்லை. எனவே, மேல் வீட்டில் வாடகைக்கு இருப்பவர்கள் விள க்கை போட்டு விட்டு சென்றனர்.

நேற்று காலை அவர் கள் கீழே வந்து பார்த்த போது வீட்டில் யாருமே நடமாட்டம் இல்லாதது போல் இருந்தது. எனவே அவர் கள் இது குறித்து முன்னாள் அமைச்சர் தேனீ. ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தார். அப்போது பாலகிருஷ்ணனும், அவரது மனைவி ஹேமலதாவும் படுக்கை அறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. மேலும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. விசாரணையில் பாலகிருஷ்ணன் கழுத்தை நெறித்தும், ஹேமலதா தலையணையால் அமுக்கியும் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இது குறித்து உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா, கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன், உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதே போல் கைரேகை, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளையும், தடயங்களையும் சேகரித்தனர்.

இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. ஆனால் ஹேமலதா அணிந்திருந்த தங்க வளையல்கள், நகைகள் மற்றும் வீட்டில் இருந்து பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை. எனவே கொலையாளிகள் வேறு ஏதாவது ஆவணங்களை தேடி இருப்பது தெரியவந்தது.

அவர்கள் பிணமாக கிடந்த அருகில் பாலகிருஷ்ணன், ஹேமலதா குடும்பத்தினரின் புகைப்படம் ஒன்று கீழே கிடந்தது. அதில் பாலகிருஷ்ணன், ஹேமலதா ஆகியோரின் புகைப்படங்களில் பெருக்கல் குறியீடு போடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் தேனீ. ஜெயக்குமாரின் மகள் படம் ரவுண்ட் செய்யப்பட்டு இருந்தது. மற்றவர்களின் புகைப்படத்தின் மீது டிக் செய்யப்பட்டுள்ளது. இந்த குறியீடு ஏன் போடப்பட்டுள்ளது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உருளையன்பேட்டை போலீசார் இந்த கொலை வழக்கு தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட ஹேமலதாஅணிந்திருந்த நகைகளை கொலையாளிகள் திருடவில்லை. எனவே வீட்டில் இருந்த மற்ற நகைகள் மற்றும் ஆவணங்களை திருடி விட்டு அதனை திசை திருப்பும் நோக்கில் ஹேமலதா அணிந்திருந்த நகைகளை கொலையாளிகள் விட்டு சென்றனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story