கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை: தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு


கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை: தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 21 Nov 2018 9:45 PM GMT (Updated: 21 Nov 2018 8:05 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதன்காரணமாக தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

கடலூர், 

தமிழகத்தில் கடந்த 1-ந்தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. அதன்பிறகு போதிய மழை இல்லை. இதற்கிடையே வங்க கடலில் உருவான கஜா புயலால் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. காற்றுடன் மழை பெய்து வந்த நிலையில், அவ்வப்போது பகலில் வெயிலும் அடித்தது.

இந்நிலையில் தென்மேற்கு வங்க கடலில் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது. இதன் காரணமாக கடலூர், விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதன்படி கடலூரில் 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலையில் மழை பெய்தது. அதன்பிறகு மாலை 4 மணிக்கு பிறகு காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை விட்டு, விட்டு இரவு வரை பெய்தது. நேற்று காலையிலும் மழை பெய்தது. அதன்பிறகு மழை இல்லை. மாலை 3 மணிக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதன் காரணமாக கடலூர் தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கரைபுரண்டு தண்ணீர் செல்கிறது. இதைத்தொடர்ந்து புதிய கலெக்டர் அலுவலகம் எதிரே தென்பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை தொட்டப்படி மழைநீர் சென்றதது.

மேலும் மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் பண்ருட்டியில் பலத்த காற்றுடன் மழை கொட்டியது. மேலும் சிதம்பரம், பரங்கிப்பேட்டை, லால்பேட்டை, அண்ணாமலைநகர், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, வடக்குத்து, சேத்தியாத்தோப்பு போன்ற மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 51.30 மில்லி மீட்டர் மழை பதிவானது. குறைந்தபட்சமாக கீழசெருவாய், மே.மாத்தூர் ஆகிய இடங்களில் தலா 5 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. மாவட்டத்தில் சராசரியாக 16.94 மில்லி மீட்டர் மழை பதிவானது.

மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

பரங்கிப்பேட்டை- 48, லால்பேட்டை-45, அண்ணாமலைநகர் - 34.30, காட்டுமன்னார்கோவில் - 34, புவனகிரி- 22, வானமாதேவி -22, குறிஞ்சிப்பாடி- 17, ஸ்ரீமுஷ்ணம்- 14.30, கொத்தவாச்சேரி- 14, வடக்குத்து- 14, பெலாந்துறை- 13.40, குடிதாங்கி- 12, கடலூர் -11, கடலூர் கலெக்டர் அலுவலகம்- 10.40, சேத்தியாத்தோப்பு - 8.40, வேப்பூர்- 8, குப்பநத்தம் - 7.50, காட்டுமயிலூர்- 7, லக்கூர் - 6. 

Next Story