கடல் சீற்றம்: கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


கடல் சீற்றம்: கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 22 Nov 2018 4:00 AM IST (Updated: 22 Nov 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

கடல் சீற்றம் காரணமாக, நேற்று கடலூரில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

கடலூர் முதுநகர், 

கஜா புயல் காரணமாக கடந்த 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதை தொடர்ந்து கடந்த 17-ந்தேதி முதல் கடலூர் துறைமுகத்தில் இருந்து பைபர் மற்றும் விசை படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தொடங்கினர். இந்த நிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும், கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் 22-ந்தேதி(அதாவது இன்று) வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு இந்த தகவல் செல்போன், வாட்ஸ்-அப், வாக்கி-டாக்கி மூலமாக தெரியப்படுத்தப்பட்டது. இதையடுத்து பைபர்படகுகளில் சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்பினர்.

ஆனால் விசை படகுகளில் சென்று ஆழ்கடலில் தங்கியிருந்து மீன்பிடித்து வந்தவர்களில் 30 படகுகளை சேர்ந்த மீனவர்களுக்கு தகவல் சென்றடையவில்லை. இதனால் அவர்கள் நேற்று முன்தினம் கரை திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து, அவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பணியை அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து 23 படகுகளில் சென்றவர்கள் நேற்று முன்தினம் இரவே துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர். மற்ற 7 படகை சேர்ந்த மீனவர்கள் சென்னை துறைமுகத்தை சென்றடைந்தனர். இவர்கள் பெரியகுப்பம், தம்மனாம்பேட்டை, ரெட்டியார் பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஆவார்கள்.

இந்த நிலையில் மீனவர்கள் கரை திரும்பியது குறித்து மீனவளத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, கடலூர் துறைமுகத்தில் இருந்து நேற்று மீன்பிடிக்க கடலுக்குள் மீனவர்கள் யாரும் செல்லவில்லை. ஆனால் ஏற்கனவே மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் பெரும்பாலானவர்கள் கரை திரும்பிவிட்டனர். ஒருசிலர் மட்டும் இன்னும் திரும்பாமல் உள்ளனர். அவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் அவர்களும் கரை திரும்பிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

Next Story