வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 2-வது கட்டமாக ரூ.40 லட்சம் வெள்ள நிவாரண பொருட்கள் கலெக்டர் அனுப்பி வைத்தார்


வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 2-வது கட்டமாக ரூ.40 லட்சம் வெள்ள நிவாரண பொருட்கள் கலெக்டர் அனுப்பி வைத்தார்
x
தினத்தந்தி 22 Nov 2018 3:30 AM IST (Updated: 22 Nov 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்கு, வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 2-வது கட்டமாக ரூ.40 லட்சம் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்களை கலெக்டர் ராமன் அனுப்பி வைத்தார்.

வேலூர், 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலூர் மாவட்ட நிர்வாகம், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் சமூகநல அமைப்புகளிடமிருந்து உடனடி நிவாரண உதவிகள் பெற்று புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

மீட்பு பணிக்கு தேவையான 12 கிரேன்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், 5 மின்னாக்கிகள் திருவாரூர் மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 2,400 புதிய மின்சாதனங்களுடன், 214 மின் ஊழியர்கள் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோன்று பல்வேறு உதவிகள் வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.11 லட்சம் மதிப்புள்ள உணவு பொருட்கள் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 25 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் என ரூ.16 லட்சம் மதிப்புள்ள பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக 2-வது கட்டமாக பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், நன்கொடையாளர்கள், தொழில் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை, பிஸ்கெட், தண்ணீர் பாட்டில்கள், மளிகை பொருட்கள், மாவு மூட்டைகள், லுங்கிகள், சேலைகள், துண்டுகள், வேட்டிகள், போர்வைகள், பாய்கள், அலுமினிய மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்கள், சோப்பு, மெழுகுவர்த்திகள், மருந்து பொருட்கள் 6 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை கலெக்டர் ராமன் அனுப்பி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் சு.ரவி, லோகநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், உதவி கலெக்டர் மெகராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், கலெக்டர் அலுவலக மேலாளர் முரளி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story