சென்னை–மதுரை தனியார் பஸ் திடீர் ரத்து; பயணிக்கு ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும், நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
சென்னை– மதுரை தனியார் பஸ் திடீரென ரத்துசெய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என டிராவல்ஸ் நிறுவனத்துக்கு, நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
மதுரை திருநகரை சேர்ந்த சக்திகணேஷ், மதுரை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
கடந்த 21.10.2015 அன்று நான் எனது மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் சென்னையில் இருந்து மதுரை வருவதற்கு தனியார் பஸ்சில் முன்பதிவு செய்தோம். இதற்கான தொகையை ஆன்லைன் மூலமாக செலுத்தினேன். அன்று இரவு 11.05 மணிக்கு தாம்பரம் பஸ்நிலையத்திற்கு பஸ் வரும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி நாங்கள் 10.30 மணி அளவில் தாம்பரம் பஸ்நிலையத்துக்கு வந்தோம். உரிய நேரத்துக்கு பஸ் வரவில்லை. இதனால் தனியார் டிராவல்ஸ் அலுவலக ஊழியரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டேன். ஆனால் அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. நள்ளிரவு 12.30 மணி வரை பஸ் வரவில்லை. பின்னர் அந்த ஊழியர் என்னை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட பஸ் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டது என்றார்.
இதனால் அங்கிருந்து மதுரை வருவதற்கு வழிதெரியாமல் நானும், எனது மனைவியும் குழந்தையை வைத்துக்கொண்டு தவித்தோம். பின்னர் அங்கிருந்து அரசு பஸ் மூலம் திருச்சிக்கும், அங்கிருந்து மற்றொரு அரசு பஸ் மூலம் மதுரைக்கும் வந்து சேர்ந்தோம். பின்னர் இதுகுறித்து மதுரையில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சென்று கேட்டேன். அவர்கள் உரிய பதில் தர மறுத்ததுடன், டிக்கெட் முன்பதிவு தொகையான ரூ.1,400–ஐ தர மறுத்துவிட்டனர். இதனால் நாங்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானோம். எனவே இதற்காக எங்களுக்கு ரூ.1 லட்சம் நஷ்டஈடு வழங்க டிராவல்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி, மறைக்காமலை ஆகியோர் விசாரித்தனர். முடிவில், மனுதாரர் விஷயத்தில் டிராவல்ஸ் நிறுவன நடவடிக்கை சேவைக்குறைபாட்டை காட்டுகிறது. எனவே மனுதாரர் செலுத்தி முன்பதிவு தொகை ரூ.1,400–ஐ 6 சதவீத வட்டியுடனும், நஷ்டஈடாக ரூ.15 ஆயிரமும் 6 வாரத்தில் செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.