கஜா புயலால் வீடுகளை இழந்து தவிப்பு சாலையில் உணவு சமைத்து சாப்பிடும் பொதுமக்கள்


கஜா புயலால் வீடுகளை இழந்து தவிப்பு சாலையில் உணவு சமைத்து சாப்பிடும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 21 Nov 2018 10:45 PM GMT (Updated: 21 Nov 2018 8:39 PM GMT)

கறம்பக்குடி பகுதியில் 6-வது நாளாக குடிநீர், மின்வினியோகம் பாதிப்பு மற்றும் வீடுகளை இழந்து தவிக்கும் பொதுமக்கள் சாலையில் உணவு சமைத்து சாப்பிடுகின்றனர். புயல் பாதிப்புகளை பார்வையிட வந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆவேசப்பட்டனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பகுதிகள் கஜா புயலின் தாக்குதலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

இந்த தாலுகாவில் உள்ள 39 ஊராட்சிகளில் 70 சதவீதம் ஓட்டு வீடுகள் மற்றும் குடிசைகள் சேதமடைந்துள்ளன. காட்டாத்தி ஊராட்சியில் ஏராளமான வீடுகளை பொதுமக்கள் இழந்துள்ளனர். தங்குவதற்கு இடமின்றி தவித்தவர்களுக்கு அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் சாலைகளிலேயே உணவு சமைத்து, அவர்களுக்கு வழங்கினர்.

புயல்பாதித்து 6 நாட்கள் ஆகியும் இந்த பகுதியில் மின்வினியோகம் வழங்கப்படவில்லை. மின்சாரம் எப்போது வரும் என்ற நிச்சயமற்ற நிலை உள்ளது. மின்சாரம் இல்லாததால் பல பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் கோபமடைந்துள்ளனர். புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட வந்த வெளிமாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ராஜகிருஷ்ணன், (அந்தியூர்), கோவிந்தராசு (பேராவூரணி) மற்றும் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. ஆறுமுகம், திருச்சி எம்.பி. குமார் உள்ளிட்டவர்களை அந்த பகுதி மக்கள் முற்றுகையிட்டு ஆவேசத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியான போலீசாரும் அதிகாரிகளும் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தினார்கள். ஆங்காங்கே முற்றுகை, மறியல் என பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடப்பதால் கறம்பக்குடி பகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் கருப்பண்ணன் மக்களை சந்திக்காமல் அதிகாரிகளை மட்டும் பார்த்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கிடையே நெல், கரும்பு, வாழை, தென்னை, பலா ஆகியவை புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் தவித்து வருகிறார்கள். இதனால் வாழ்வாதாரம் இன்றி எதிர்காலம் கேள்வி குறியாகிப்போன விவசாயிகள், கறம்பக்குடி தாலுகா அலுவலகத்திற்கு தினமும் வந்து அரசு என்ன உதவி செய்ய போகிறது என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.


Next Story