தந்தையை எரித்து கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த மகன் கைது


தந்தையை எரித்து கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த மகன் கைது
x
தினத்தந்தி 21 Nov 2018 10:15 PM GMT (Updated: 21 Nov 2018 9:02 PM GMT)

கரூர் அருகே சொத்து தகராறில் தந்தையை எரித்து கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே என்.புதூர் தெற்குதெருவை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 67). இவர், கூட்டுறவு வங்கியில் செயளாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மங்கையர்க்கரசி (62). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களுடைய மகன் தங்கவேல் (42). இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். மதுவுக்கு தங்கவேல் அடிமையானதால் அவரை, பெங்களூருவில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சேர்த்து அவரது குடும்பத்தினர் சிகிச்சை அளித்தனர். கடந்த செப்டம்பர் மாதம் சொந்த ஊருக்கு வந்த அவர், தொழில் தொடங்குவதற்கு பணம் தருமாறு தனது தந்தையிடம் கேட்டார்.

பின்னர் தந்தையிடம் சொத்தினை பிரித்து தருமாறு கூறி அவர் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த தங்கவேல், வீட்டின் அறையில் கட்டிலில் தூங்கி கொண்டிருந்த கந்தசாமியின் மீது தான் வாங்கி வந்த பெட்ரோலை ஊற்றி திடீரென தங்கவேல் தீ வைத்து விட்டு தப்பிஓடிவிட்டார். உடல் கருகிய நிலையில் கரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கந்தசாமி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து வாங்கல் போலீசார் தங்கவேலை தேடி வந்தனர்.

தனிப்படை அமைத்து 2 மாதங்களாக தேடியும் தங்கவேல் பிடிபடாமல் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வாங்கல் அக்ரஹாரம் பிரிவு ரோட்டில் வாங்கல் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்து வந்து கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்த போது, அவர் போலீசாரால் தேடப்படும் கொலையாளி தங்கவேல் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது, என் மீது நம்பிக்கை வைத்து சொத்தினை தராத தால் தந்தை கந்தசாமியை கொலை செய்ததாகவும், பின்னர் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்து விட்டு தனது மனைவி, மகளை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் தங்கவேலை கைது செய்து கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு எண் 2-ல் ஆஜர்ப்படுத்தினர். அப்போது டிசம்பர் 5-ந்தேதி வரை தங்கவேலுவை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் வேனில் அழைத்து சென்று தங்கவேலுவை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story