வடமதுரை அருகே விபத்து: சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி


வடமதுரை அருகே விபத்து: சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
x
தினத்தந்தி 22 Nov 2018 3:15 AM IST (Updated: 22 Nov 2018 2:33 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலியானார். மற்றொரு டிரைவர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வடமதுரை, 

சென்னையில் இருந்து வெங்காய மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை திண்டுக்கல் மாவட்டம் கட்டசின்னாம்பட்டி அருகே உள்ள கோட்டைப்பட்டியை சேர்ந்த ராஜன் (வயது 33) என்பவர் ஓட்டினார். அவருடன் மாற்று டிரைவராக கன்னிவாடி அருகே உள்ள காப்பிளியபட்டியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பவர் உடன் வந்தார்.

நேற்று அதிகாலை திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வடமதுரையை அடுத்த வேல்வார்கோட்டை பிரிவு அருகே லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோர தடுப்பு கம்பிகளை உடைத்துக் கொண்டு அங்குள்ள மின்கம்பத்தின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் மின்கம்பம் உடைந்து விழுந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் ராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு டிரைவர் மணிகண்டன் படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா திலகராணி மற்றும் போலீசார் சம்ப இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டனை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ராஜனின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story