திருச்சியில் 15 பெண்களிடம் தங்க சங்கிலி பறித்த கொள்ளையன் கைது ரூ.18 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு


திருச்சியில் 15 பெண்களிடம் தங்க சங்கிலி பறித்த கொள்ளையன் கைது ரூ.18 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு
x
தினத்தந்தி 21 Nov 2018 11:00 PM GMT (Updated: 2018-11-22T02:40:48+05:30)

திருச்சியில் 15 பெண்களிடம் தங்க சங்கிலி பறித்த கொள்ளையனிடம் இருந்து ரூ.18 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டது.

திருச்சி,

திருச்சி நகரில் பல இடங்களில் பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இந்த சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையனை பிடிப்பதற்காக மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்படி தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் ஸ்ரீரங்கம் மேலூர் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் அவரது பெயர் பிராங்க்ளின் குமார் (வயது35), ஸ்ரீரங்கம் ராகவேந்திரபுரம் என்றும் மாதவன் என்பவரிடம் ரூ.1000 வழிப்பறி செய்து விட்டு சென்றதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் துருவி துருவி நடத்திய விசாரணையில் திருச்சி கே.கே.நகர், பாலக்கரை, பீமநகர், கண்டோன்மெண்ட், வடக்கு ஆண்டார் வீதி, ஸ்ரீரங்கம் பகுதிகளில் வீட்டில் தனியாக இருந்த பெண்கள் மற்றும் நடந்து சென்ற பெண்கள், வாகனத்தில் சென்ற பெண்கள் உள்பட மொத்தம் 15 பெண்களிடம் தங்க சங்கிலிகளை பறித்து சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து ரூ.18 லட்சம் மதிப்புள்ள 60 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.600, ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட பிராங்க்ளின் குமார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story