இளம்பெண் பாலியல் பலாத்காரம் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி உண்ணாவிரதம்


இளம்பெண் பாலியல் பலாத்காரம் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 21 Nov 2018 10:45 PM GMT (Updated: 21 Nov 2018 9:55 PM GMT)

கும்பகோணம் அருகே இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருவிடைமருதூர்,

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் உள்ள தனியார் பட்டு ஜவுளிக்கடையில் வேலை செய்த 21 வயது இளம்பெண்ணை கடந்த 7 -ந் தேதி அதே பகுதியில் பட்டுப்புடவை கடை நடத்தி வரும் சின்னப்பா (42) என்பவர் தனது வீட்டுக்கு அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கை விசாரித்த கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசார் சின்னப்பாவை கைது செய்தனர்.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மேலும் சிலரையும் கைது செய்ய வலியுறுத்தியும் கடந்த 13-ந் தேதி சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்ற பேரணி நடந்தது. இந்த வழக்கில் ஷேக் மைதீன் (34) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். நேற்று இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரி திருபுவனத்தில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

உண்ணாவிரதத்தை அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் வாசுகி தொடங்கி வைத்தார்.

உண்ணாவிரதத்தில் திருபுவனத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினர் மாதர் சங்கத்தினர், மகளிர் குழுவினர், வர்த்தகர் சங்கத்தினர், பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நேற்று நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் தி.மு.க. சார்பில் கோ.வி.செழியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தமிழக அரசு தூங்கி கொண்டிருப்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து உடனடியாக எழுந்து பேசிய அ.தி.மு.க. பேரூர் செயலாளரும் சோழன்பட்டு சொசைட்டி தலைவருமான சிங்.செல்வராஜ், பாதிக்கபட்ட பெண்ணுக்காக திருபுவனம் திகோ சில்க்ஸ் சொசைட்டியில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி பாதிக்கபட்ட பெண்ணுக்காக ரூ.10ஆயிரத்தை அதே இடத்தில் வழங்கினார். உண்ணாவிரதத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்தையொட்டி திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story