புனேயில் வீடு புகுந்து பெண் துப்பாக்கியால் சுட்டுக்கொலை கொலையாளிகளை பிடிக்க சென்ற இன்ஸ்பெக்டரும் சுடப்பட்டதால் பரபரப்பு


புனேயில் வீடு புகுந்து பெண் துப்பாக்கியால் சுட்டுக்கொலை கொலையாளிகளை பிடிக்க சென்ற இன்ஸ்பெக்டரும் சுடப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Nov 2018 5:00 AM IST (Updated: 22 Nov 2018 3:52 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் வீடு புகுந்து பெண் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை கொன்ற கொலையாளிகளை பிடிக்க சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டரும் சுடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புனே, 

புனேயில் வீடு புகுந்து பெண் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை கொன்ற கொலையாளிகளை பிடிக்க சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டரும் சுடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண் சுட்டுக்கொலை

புனே சந்தன்நகர் ஆனந்த் பார்க் பகுதியை சேர்ந்தவர் பிரிஜேஷ். இவரது மனைவி ஏக்தா(வயது38). நேற்று காலை 9 மணியளவில் இவர்களது வீட்டில் இருந்து துப்பாக்கி சுடும் சத்தம்கேட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் பதறி அடித்தபடி ஓடிவந்து பார்த்தனர். அப்போது, ஏக்தா வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

2 பேர் வீட்டிற்குள் புகுந்து தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டதாக பிரிஜேஷ் அலறினார். மேலும் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ஏக்தா பரிதாபமாக உயிரிழந்தார்.

2 பேர் தப்பிஓட்டம்

இதுபற்றி தகவல் அறிந்து வந்த சந்தன்நகர் போலீசார் ஏக்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஏக்தா என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார் என்பது உடனடியாக தெரியவில்லை. போலீசார் கொலையாளிகளை அடையாளம் காண்பதற்காக அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சியை பார்வையிட்டனர்.

அப்போது, பிரிஜேசின் வீட்டில் இருந்து கொலையாளிகள் இருவரும் கையில் துப்பாக்கியுடன் தப்பிஓடும் காட்சிகள் தெளிவாக பதிவாகி இருந்தன.

இதையடுத்து போலீசார் இருவரையும் பிடிக்க அதிரடி தேடுதல் வேட்டையை தொடங்கினார்கள். இந்தநிலையில், கொலையாளிகள் இருவரும் ரெயிலில் தப்பிச்செல்ல புனே ரெயில் நிலையம் வர உள்ளதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இன்ஸ்பெக்டர் சுடப்பட்டார்

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜானன் பவார் தலைமையில் 5 போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த கொலையாளிகள் உள்பட 3 பேர் வந்தனர். போலீசார் அவர்களை பிடிக்க நெருங்கியபோது, சுதாரித்துக்கொண்ட கொலையாளிகள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

இதில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜானன் பவார் உடலில் குண்டு பாய்ந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதை பார்த்து மற்ற போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதைப்பார்த்து பதறிப்போன பயணிகளும் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் புனே ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு உண்டானது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். காயம் அடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜானன் பவார் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Next Story