20 நாட்களுக்கு ஒருமுறை வினியோகிப்பதால் அவினாசியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு


20 நாட்களுக்கு ஒருமுறை வினியோகிப்பதால் அவினாசியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
x
தினத்தந்தி 22 Nov 2018 4:17 AM IST (Updated: 22 Nov 2018 4:17 AM IST)
t-max-icont-min-icon

20 நாட்களுக்கு ஒருமுறை வினியோகிப்பதால் அவினாசியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் குடிநீருக்காக பொதுமக்கள் காலிக்குடங்களுடன் அலையும் நிலை ஏற்பட்டு உள்ளது.

அவினாசி,

அவினாசி பேரூராட்சி பகுதிகளில் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகள், அலுவலகங்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக சரிவர குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் அவினாசி பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் பலர் குடிநீருக்காக இருசக்கர வாகனங்களில் காலிக்குடங்களுடன் அவினாசி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு புறப்பட்டு செல்கின்றனர். அங்குள்ள தெருக்குழாய்களில் வினியோகிக்கப்படும் குடிநீரை பிடிப்பதற்காக குடங்களை வரிசையாக போட்டு உள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து கருவலூர், நம்பியம்பாளையம், வெள்ளியம்பாளையம், ஆட்டையாம்பாளையம், அவினாசி, திருமுருகன்பூண்டி, அனுப்பர்பாளையம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்பட்டது. நாளடைவில் ஆங்காங்கே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் 10 நாட்களுக்கு ஒருமுறை என்று போய் தற்போது 20 நாட்கள் அல்லது 22 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

இதன் காரணமாக போதிய குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதி அடைந்து வருகிறோம். 20 நாட்களுக்கு ஒருமுறை வினியோகிக்கப்படும் குடிநீரை பெரிய பிளாஸ்டிக் டிரம்களில் அடைத்து வைப்பதால் சில நேரங்களில் புழு, பூச்சிகள் உருவாகி விடும் நிலை இருக்கிறது. இதை குடிப்பதால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.

எனவே அவினாசி பகுதியில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் காலிக்குடங்களுடன் வெள்ளியம்பாளையத்தில் உள்ள பொதுக்குழாய் முன்பு நீண்ட வரிசையில் காத்து இருக்கிறோம். குடிநீருக்காக பல மணி நேரம் காத்து கிடப்பதால் வேலைக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது. எனவே மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூர் வரும் பவானி ஆற்றின் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைத்து முறையாக குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Next Story