திருப்பூர் மாநகரில் அதிகரிக்கும் செல்போன் திருட்டு சம்பவங்களால் போலீசார் திணறல் - சிறப்பு தனிப்படை அமைக்கப்படுமா?


திருப்பூர் மாநகரில் அதிகரிக்கும் செல்போன் திருட்டு சம்பவங்களால் போலீசார் திணறல் - சிறப்பு தனிப்படை அமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 22 Nov 2018 5:00 AM IST (Updated: 22 Nov 2018 4:28 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகரில் அதிகரிக்கும் செல்போன் திருட்டு சம்பவங்களால் போலீசார் திணறி வருகிறார்கள்.

திருப்பூர்,

திருப்பூர் மாநகரில் செல்போன் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பதால் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். சிறப்பு தனிப்படை அமைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

‘டாலர் சிட்டி’ என்று பெயர் பெற்ற திருப்பூர் மாநகரில் பின்னலாடை தொழில் பிரதானம். வெளிமாவட்டம் மட்டும் இல்லாமல் வெளிமாநில தொழிலாளர்கள் இங்கு வந்து தங்கி பணியாற்றி வருகிறார்கள். தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் இங்கு வீட்டு வாடகை முதல் ஓட்டல்களில் உணவுப்பொருட்களின் கட்டணம் வரை அதிகமாக உள்ளது.

வாரத்தில் 6 நாட்கள் கடின உழைப்பால் சம்பாதிக்கும் பணத்தை தொழிலாளர்கள் விரும்பியபடி செலவு செய்து வாழ்க்கை நடத்துகிறார்கள். மது விற்பனையும் இங்கு அதிகம். அதுபோல் சமீபகாலமாக செல்போன்களின் விற்பனை திருப்பூர் மாநகரில் அதிகரித்து வருகிறது. நவீன செல்போன்களை வாங்குவதில் தான் இளைஞர், இளம்பெண்களுக்கு நாட்டம் அதிகம் உள்ளது. மாநகரில் மட்டும் செல்போன் கடைகள் நாளுக்குநாள் பெருகி வருவதே இதற்கு சான்று. பண்டிகை காலங்களில் ஜவுளிக்கடை, நகைக்கடைகளில் கூடும் கூட்டத்தை விட செல்போன் கடைகளில் தான் அதிகப்படியான கூட்டத்தை காண முடிகிறது. அந்தளவுக்கு செல்போன் மீது அனைத்து தரப்பினரிடமும் மோகம் ஏற்பட்டுள்ளது.

செல்போன்களின் பயன்பாடு அதிகரித்தது ஒருபுறம் இருந்தாலும், அந்தளவுக்கு செல்போன்கள் திருட்டு போகும் சம்பவங்களும் மாநகரில் அதிகரித்து வருகிறது. தனியாக செல்போனில் பேசியபடி நடந்து செல்பவரை பின்தொடர்ந்து சென்று செல்போனை பறித்து செல்லும் சம்பவங்கள் திருப்பூரில் தாராளமாக நடந்து வருகிறது. மோட்டார் சைக்கிளில் வரும் ஆசாமிகள் செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி விடுகிறார்கள். குறிப்பாக விலை உயர்ந்த நவீன செல்போன்களை குறித்து வைத்து ஆசாமிகள் பறித்து செல்லும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இதுபோன்ற செல்போன்களை மற்ற இடங்களில் குறைந்த விலைக்கு விற்று விட்டு சென்று விடுகிறார்கள்.

குறிப்பாக டாஸ்மாக் கடைக்கு அருகே உள்ள செல்போன் கடைகளில் இதுபோன்ற திருட்டு செல்போன்களை விற்று விட்டு சென்று விடுகிறார்கள். அதுபோல் வீட்டில் கதவை திறந்து வைத்து செல்போனுக்கு சார்ஜர் போட்டு இருந்தாலும் வீடு புகுந்து செல்போனை திருடி செல்லும் சம்பவங்களும் நடந்துள்ளது. சில ஆசாமிகளோ, உறவினருக்கு பேச வேண்டும் என்று நன்கு தெரிந்த நபர்களிடம் செல்போனை வாங்கி பேசுவது போல் நடித்து மாயமாகிவிடும் சம்பவங்களும் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையங்களை நாடிச்சென்று புகார் தெரிவிக்கிறார்கள்.

குற்றப்பிரிவு போலீசாருக்கு தற்போது பெரும் தலைவலியாக இருப்பது இத்தகைய செல்போன் திருட்டு சம்பவங்கள் தான். ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட செல்போன் திருட்டு புகார்கள் நிலுவையில் இருந்து வருகிறது. செல்போனை பறித்து செல்லும்போது பொதுமக்களிடம் சிக்கும் ஆசாமிகள் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் சிறையில் அடைக்கிறார்கள். ஆனால் செல்போன் பறித்து விட்டு மாயமாகும் ஆசாமிகளை பிடிப்பதில் சுணக்கம் ஏற்பட்டு வருகிறது.

செல்போனை பறிகொடுத்தவர்களிடம் இருந்து சம்பந்தப்பட்ட செல்போனின் ஐ.எம்.இ.ஐ. நம்பர், சிம்கார்டு எண், எந்த நிறுவனத்தின் செல்போன் ஆகியவற்றை குறிப்பிட்டு வைத்துக்கொண்டு சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் அந்த செல்போனை பயன்படுத்துபவர்களின் விவரங்களை கண்டறிந்து மீட்டு வருகிறார்கள். ஆனால் வேலைப்பளு காரணமாக இந்த நடைமுறையில் போலீசார் முழு முயற்சியுடன் இறங்குவதில்லை. இதனால் திருட்டு செல்போன்களை மீட்பதில் காலதாமதம் தொடர்கிறது.

தினமும் செல்போன் திருட்டு புகார்கள் குற்றப்பிரிவு போலீசாரிடம் குவிந்து வருவதால் மற்ற திருட்டு வழக்குகளை விசாரிக்க முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர். செல்போன் திருட்டு வழக்குகள் போலீசாருக்கு பெரும் தலைவலியாக மாறிவிட்டது. மேலும் புகார் தெரிவிக்க வருபவர்களிடம் செல்போன் வாங்கிய ரசீது உள்ளிட்ட விவரங்களை பெற்று அதன்பிறகே விசாரணையை தொடங்க வேண்டியிருக்கிறது. முறைப்படி புகார்களை பெற்று அவற்றை துப்பு துலக்கி செல்போன்களை கண்டறிவதற்குள் போலீசாருக்கு போதும், போதும் என்ற நிலை ஏற்பட்டு விடுகிறது.

கடந்த 6 மாதம், 8 மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்தவர்களின், செல்போன்களை போலீசார் கண்டறிந்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்டவர்களிடம், செல்போன் கிடைத்து விட்டது என்று தகவல் தெரிவிப்பதிலும் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. சிலர் போலீசாருக்கு வழங்கிய செல்போன் எண்ணை மாற்றியிருக்கிறார்கள். இதனால் கண்டுபிடித்த செல்போன்களை உரியவரிடம் ஒப்படைக்க முடியாமல் தேங்கியுள்ளன.

குற்றப்பிரிவில் ஏற்கனவே போலீசார் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், செல்போன் திருட்டு வழக்குகளை துப்பு துலக்குவதில் நேரத்தை செலுத்தினால் மற்ற வழக்குகளை கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது என்பதாலும் செல்போன் திருட்டு புகார்களை பெறுவதற்கும் போலீசார் தயக்கம் காட்டுகிறார்கள்.

எனவே செல்போன் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்கு மாநகரில் தனியாக சிறப்பு தனிப்படை அமைக்க வேண்டும். அந்த படையினர் செல்போன் திருட்டு வழக்குகளை மட்டும் துப்பு துலக்கி விசாரிக்கும்போது விரைவில் தீர்வு எட்ட முடியும். மற்ற வழக்கு விசாரணையும் பாதிக்காமல் தடுக்கப்படும். செல்போன் ஜேப்படி ஆசாமிகளையும் குறிவைத்து பிடிக்க முடியும். இதற்கு உயர் அதிகாரிகள் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story