கன மழை எச்சரிக்கை எதிரொலி: வீராணம், வாலாஜா, பெருமாள் ஏரிகளின் நீர்மட்டம் குறைப்பு - அமைச்சர் சம்பத் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து வீராணம், வாலாஜா, பெருமாள் ஏரிகளின் நீர்மட்டம் குறைக்கப்பட்டு வருகிறது. மேலும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைச்சர் சம்பத் தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். கலெக்டர் அன்புசெல்வன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது.
தொடர்ந்து அமைச்சர் எம்.சி.சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் கஜா புயல் தொடர்பாக பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடலூர் மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதன்படி மழை, வெள்ளம் வந்தாலும், அதனால் ஏற்படும் சேதங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பெய்யும் மழை நீர் வீராணம் ஏரிக்கு வரும். ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படும் போது அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் வீராணம் ஏரியின் நீர் மட்டத்தை குறைத்து வைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
இதேபோல் வாலாஜா, பெருமாள் ஏரிகளின் நீர் மட்டத்தையும் குறைத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஏரிகளை பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அனைத்துத்துறை அலுவலர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
எந்த சூழ்நிலையிலும் கடலூர் மாவட்ட மக்களுக்கு சிறிதளவு கூட பாதிப்பு ஏற்படாதவாறு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டி மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். கஜா புயல் ஏற்பட்ட போது பெரும் பாதிப்பு நமது மாவட்டத்துக்கு ஏற்படவில்லை. அதற்கு உறுதுணையாக செயல்பட்ட துறை அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
தொடர்ந்து கலெக்டர் அன்புசெல்வன் கூறுகையில், மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் உள்ள உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்த பிறகே தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. அனைத்துத்துறை அலுவலர்களுடன், போலீசாரும் முன்னெச்சரிக்கை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே ரூ.200 கோடியில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், சப்-கலெக்டர்கள் சரயூ (கடலூர்), விசு மகாஜன்(சிதம்பரம்), பிரசாந்த்(விருத்தாசலம்), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சந்தோஷினி சந்திரா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இளஞ்செல்வி, துணை இயக்குனர் (சுகாதாரம்) கீதா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஆனந்தன் உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story