புயல் பாதித்த மாவட்டத்திற்கு ரூ.4 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்
புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்துக்கு ரூ.4 கோடி மதிப்பிலான புயல் நிவாரண பொருட்களை திருச்சியில் இருந்து மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.
திருச்சி,
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மக்களுக்கு புயல் நிவாரண பொருட்கள் வழங்கி உதவிட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.
மேலும் நிவாரண பொருட்கள் அனைத்தும் திருச்சியில் உள்ள மாவட்ட தி.மு.க. தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்திற்கு கொண்டு சேர்த்திட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். அதன்படி, கடந்த 2 நாட்களாக சென்னை, சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு அவற்றை தி.மு.க.வினர் திருச்சிக்கு லாரி மற்றும் இதர வாகனங்களில் கொண்டு வந்திருந்தனர். இந்த நிவாரண பொருட்களை, புயலால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு அனுப்பி வைத்திடும் நிகழ்ச்சி நேற்று திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. அதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு காலை 10.50 மணிக்கு வந்திறங்கினார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருச்சி சத்திரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு வந்தார். அவருடன் தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரிகள், டி.ஆர்.பாலு, பழனிமாணிக்கம் மற்றும் திருச்சி சிவா எம்.பி., திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ. ஆகியோர் வந்தனர்.
அங்கு கலைஞர் அறிவாலய வளாகம் மற்றும் சாலையோரங்களில் புயல் நிவாரண பொருட்களுடன் லாரிகள் மற்றும் இதர வாகனங்கள் தி.மு.க.வின் இருவண்ண கொடிகளை கட்டிய நிலையில் தயாராக நின்றது. அங்கு புயல் நிவாரண பொருட்களுடன் நின்ற லாரிகளை கொடியசைத்து மு.க.ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார்.
அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:–
எதிர்க்கட்சி என்ற முறையில் கஜா புயல் நிவாரணமாக தமிழக முதல்–அமைச்சரிடம் தி.மு.க, சார்பில் ரூ.1 கோடி நிதி நேரடியாக வழங்கப்பட்டது. மேலும் தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை புயல் நிவாரண நிதியாக வழங்கி இருக்கிறார்கள். சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் மகளிர் அணி சார்பில் ரூ.70 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை நேற்றைய தினம் லாரிகள் மூலம் நான்தான் கொடியசைத்து அனுப்பி வைத்தேன்.
இன்றைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளால் சேகரிக்கப்பட்ட 400 டன் அரிசி, ரவை, கோதுமை, சர்க்கரை, பருப்பு வகைகள், காய்கறிகள், குழந்தைகளுக்கு தேவையான துணிமணிகள், மருந்து–மாத்திரைகள், மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் 100 லாரிகளில் ரூ.4 கோடி மதிப்பிலான நிவாரண உதவி பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக உதவிய மாவட்ட கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.
இந்த புயல் நிவாரண பணியைகூட ஆளும் கட்சியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க.வினர் குறிப்பாக முதல்–அமைச்சர், அமைச்சர்கள் தி.மு.க. இதை அரசியல் ஆக்கி கொண்டிருக்கிறது என்று ஒரு தவறான, தேவையற்ற, வேண்டாத ஒரு பொய்யான செய்தியை தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். தி.மு.க.வை பொறுத்தவரை இதில் எந்தவித அரசியலும் ஆக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதரத்தை காக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தி.மு.க. முழுமையாக ஈடுபடுகிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன். நியாயமாக புயலால் பாதிக்கப்பட்ட இடத்துக்கு முதல்–அமைச்சரே நேரடியாக வந்து ஆய்வுசெய்து, ஆறுதல் சொல்லி நிவாரண பணிகளை வேக வேகமாக முடுக்கி விட்டிருக்க வேண்டும்.
ஆனால், அவர் 5 நாட்களுக்கு பிறகுதான் அதுவும் சென்னையில் இருந்து விமானத்தில் ஏறி திருச்சிக்கு வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு, அதிகபட்சமாக 5 மணிநேரங்கூட அந்த பணியில் ஈடுபடவில்லை. மேலும் மழை வந்து விட்டது என்று சொல்லி பாதியிலேயே முடித்து விட்டு திரும்பி இருக்கிறார். ஆகவே, இது வேடிக்கையாக இருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் முதல்–அமைச்சர்கள் இதுபோல இழிதக்க நிலையிலோ, கேவலமான நிலையிலோ, எதைப்பற்றியும் கவலைப்படாத நிலையில் செயல்பட்டது கிடையாது. ஆனால், எடப்பாடி இதை செய்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று டெல்லி சென்று பிரதமரை சந்தித்து நிவாரண நிதி கேட்டிருக்கிறார். அதையாவது முறையாக பெற்று வருவார் என நம்பிக்கை இருக்கிறது என்று சொன்னாலும் அதை பெற வேண்டும், அதற்கான தொகையை மத்திய அரசு உடனடியாக அளிக்க வேண்டும் எனவும் தி.மு.க. சார்பிலும் கேட்டுக்கொள்கிறோம்.
புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற தெரிந்த உடனே மத்திய அரசு உடனடியாக ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கி இருக்க வேண்டும். ஆனால், மாநில அரசுதான் ஆய்வு செய்து பார்த்து விட்டு ஆய்வறிக்கை கொடுத்த பின்னர்தான் நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்ற அவசியல் இல்லை. போர்க்கால அடிப்படையில் நிச்சயமாக முன்கூட்டியே தந்திருக்க வேண்டும். இதே அ.தி.மு.க. ஆட்சியில் வர்தா புயல், தானே புயல், ஒக்கி புயல் வந்தபோது ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 573 கோடி கேட்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு வழங்கிய தொகையோ வெறும் ரூ.2 ஆயிரத்து 12 கோடி மட்டும்தான். ஆனால், இப்போது ரூ.15 ஆயிரம் கோடி வழங்க கேட்டிருக்கிறார்கள். அதிலும் உடனடியாக ரூ.1,500 கோடி வழங்க வேண்டும் என கேட்டிருக்கிறார்கள். ஆனால், கடந்த கால வரலாறுகளையெல்லாம் பார்க்கும்போது நிச்சயமாக வழங்குவார்களா? என்பது கேள்விக்குறிதான். வழங்கினால் சிறப்பு. வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பின்னர் தஞ்சை மாவட்டம் சென்று அங்கு பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.