குடியிருப்புக்குள் புகுந்து: வளர்ப்பு நாய்களை வேட்டையாடும் சிறுத்தைப்புலி - பொதுமக்கள் பீதி


குடியிருப்புக்குள் புகுந்து: வளர்ப்பு நாய்களை வேட்டையாடும் சிறுத்தைப்புலி - பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 23 Nov 2018 3:30 AM IST (Updated: 22 Nov 2018 10:41 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே குடியிருப்புக்குள் புகுந்து வளர்ப்பு நாய்களை சிறுத்தைப்புலி வேட்டையாடி வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுயானை, காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தைப்புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வனவிலங்குகளின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்படுவதால், அவை திசைமாறி குடியிருப்புகளுக்குள் புகுந்து வருகின்றன. இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கிறது. வனத்துறையில் போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தால், குடியிருப்புக்குள் புகும் வனவிலங்குகளை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தொய்வு ஏற்படுகிறது.

இதற்கிடையில் கோத்தகிரியில் இருந்து அளக்கரை செல்லும் சாலையில் உள்ள காமராஜ் நகர், புதூர், சோலாடா உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளது. குடியிருப்புக்குள் புகுந்து வளர்ப்பு நாய்களை சிறுத்தைப்புலி வேட்டையாடி வருவதால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர். கடந்த மாதம் காமராஜ் நகரில் ஜெயபால், பாண்டியன், சேக் முகமது ஆகியோரது வீட்டில் வளர்ப்பு நாய்களை சிறுத்தைப்புலி கவ்வி சென்றது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரது வீட்டில் வளர்ப்பு நாயை கவ்வி செல்ல சிறுத்தைப்புலி முயன்றது. சத்தம் கேட்டதும் தூக்கத்தில் இருந்து எழுந்த சங்கர் மின்விளக்குகளை எரிய விட்டதால், நாயை விட்டுவிட்டு சிறுத்தைப்புலி அங்கிருந்து தப்பி ஓடியது. இருப்பினும் சிறுத்தைப்புலி கவ்வியதில் அந்த நாயின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த கல்வி என்பவரது வீட்டில் நள்ளிரவில் புகுந்த சிறுத்தைப்புலி அங்கிருந்த நாயை கவ்வி சென்றது. இவ்வாறு சிறுத்தைப்புலியின் அட்டகாசம் தொடர்ந்து வருவதால், இரவில் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வரும் சிறுத்தைப்புலியால் குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு விடுமா? என்ற அச்சத்தில் இருந்து வருகிறோம். மேலும் தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே அந்த சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்காணித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவோ அல்லது கூண்டு வைத்து பிடிக்கவோ வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story