கோவை அரசு ஆஸ்பத்திரியில்: பன்றிக்காய்ச்சலுக்கு 3 பேர் பலி - வைரஸ் காய்ச்சலுக்கு மூதாட்டி சாவு


கோவை அரசு ஆஸ்பத்திரியில்: பன்றிக்காய்ச்சலுக்கு 3 பேர் பலி - வைரஸ் காய்ச்சலுக்கு மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 23 Nov 2018 3:00 AM IST (Updated: 22 Nov 2018 10:45 PM IST)
t-max-icont-min-icon

கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு 3 பேர் பலியாகினர். வைரஸ் காய்ச்சலுக்கு மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

கோவை, 

தமிழகத்தில் தற்போது டெங்கு, வைரஸ், பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல்கள் கோவை மாவட்டத்திலும் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு தினமும் ஏராளமானவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கோவை சொக்கம்புதூரை சேர்ந்தவர் ஜெயகாந்தன் (வயது 60). இவர் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு நடத்திய பல்வேறு கட்ட பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதை டாக்டர்கள் அறிந்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்ததுடன், அவருடைய உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.

கோவையை அடுத்த கோ வில்பாளையம் அருகே உள்ள கணேசபுரம் பகுதியை சேர்ந்த பச்சையண்ணன் (73). இவர் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதியடைந்து வந்தார். இதற்காக அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். காய்ச்சல் குறையாததால் அவர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதை அறிந்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி என்பவருடைய மனைவி காவேரி (40). இவருக்கு சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்தது. இதற்காக அவர் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இருப்பினும் காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து அவருக்கு சளி மற்றும் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக கடந்த 19-ந் தேதி அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறப்பு வார்டில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆலங்கடவை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மனைவி மலையம்மாள் (70). இவர் வைரஸ் காய்ச்சல் காரணமாக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 20-ந் தேதி மலையம்மாளின் உடல்நிலை மிகவும் மோசமானது.

இதனை தொடர்ந்து டாக்டர்கள் அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் மாலையில் இறந்தார்.

Next Story