விவசாயி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு
மங்களபுரம் அருகே விவசாயி குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் அருகே உள்ள ஈஸ்வரமூர்த்திபாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 40). விவசாயி. இதே ஊரை சேர்ந்தவர் அழகேசன் (29). இவர்கள் இருவருக்கும் அருகருகே விவசாய நிலங்கள் உள்ளன.
இந்த நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் 13-ந் தேதி முருகேசன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மங்களபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகேசன், அவரது உறவினர்கள் ராமு (65), சின்னப்பன் (60) என 3 பேரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு நாமக்கல் முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அழகேசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி இளவழகன் தீர்ப்பு கூறினார். இதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அழகேசன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இவ்வழக்கில் ராமு, சின்னப்பன் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story