கம்பத்தில், கடனை செலுத்திய பிறகும் ஆவணங்களை திருப்பி தராத கூட்டுறவு சங்கத்துக்கு பூட்டு
கம்பத்தில், கடனை செலுத்திய பிறகும் ஆவணங்களை திருப்பி தராத கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர்.
கம்பம்,
கம்பம் வ.உ.சி திடல் அருகே எம்.டி.(தனி)185 கம்பம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் கம்பம், கூடலூர் மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வீடு மற்றும் நிலத்தின் ஆவணங்களை அடமானமாக வைத்து கடன் பெற்றனர். இந்த கடனை அவர்கள் தவணை மூலம் திரும்ப செலுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து கடனை முழுமையாக செலுத்திய பொதுமக்கள் ஆவணத்தை திருப்பி கேட்டனர். ஆனால் ஆவணத்தை தராமல் கூட்டுறவு சங்க அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.
இதனால் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தை கடந்த பிப்ரவரி மாதம் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சென்னையில் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி தலைமை அலுவலகத்தில் ஆவணங்கள் உள்ளதாகவும், அவற்றை விரைவில் வாங்கி தருவதாகவும் உறுதியளித்தனர். ஆனால் ஆவணங்கள் திரும்ப வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்களில் சிலர் சென்னை தலைமை அலுவலகத்திற்கு சென்று ஆவணங்கள் குறித்து கேட்டனர். அப்போது அவர்கள், சம்பந்தப்பட்ட கம்பம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் இருந்து பணம் கட்டவில்லை. பணம் கட்டிய பின்பு தான் ஆவணங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் என கூறியுள்ளனர்.
இதனால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் நேற்று கம்பத்தில் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தை முற்றுகையிட முடிவு செய்தனர். இதை அறிந்த அதிகாரிகள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தை அலுவலக நேரத்திலேயே பூட்டி சென்றுவிட்டனர். இதையடுத்து கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தை முற்றுகையிட வந்த பொதுமக்கள் கதவு பூட்டியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் அதிகாரிகள் போட்ட பூட்டிற்கு மேல் தாங்கள் கொண்டு வந்த பூட்டை போட்டு பூட்டினர். மேலும் அங்கிருந்த அலுவலக உதவியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்ததும் கம்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை அங்கிருந்து கலைய செய்தனர்.
Related Tags :
Next Story