விருகம்பாக்கத்தில் வாலிபரிடம் நூதன முறையில் நகை, செல்போன் பறிப்பு


விருகம்பாக்கத்தில் வாலிபரிடம் நூதன முறையில் நகை, செல்போன் பறிப்பு
x
தினத்தந்தி 22 Nov 2018 10:00 PM GMT (Updated: 2018-11-23T01:11:09+05:30)

விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் அருகே சென்றபோது பின்னால் மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர், தினேசை வழிமறித்து நிறுத்தினார்.

பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர், லட்சுமி நகரைச் சேர்ந்தவர் தினேஷ்(வயது 19). நேற்று முன்தினம் இரவு கோயம்பேட்டில் இருந்து வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் அருகே சென்றபோது பின்னால் மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர், தினேசை வழிமறித்து நிறுத்தினார்.

பின்னர் அவர், தனது நண்பரை மோட்டார்சைக்கிளில் இடித்துவிட்டு வந்து விட்டதாக கூறி அதற்கு இழப்பீடு தரும்படிகேட்டு, தினேஷிடம் இருந்த 2 பவுன் நகை, செல்போனை பறித்துக்கொண்டார். மேலும் தனது நண்பரிடம் வந்து மன்னிப்பு கேட்கும்படி வற்புறுத்தி தனது மோட்டார் சைக்கிளில் தினேஷை ஏற்றிச்சென்றார்.

சிறிது தூரம் சென்றதும் மோட்டார்சைக்கிளை நிறுத்திய மர்மநபர், தினேஷிடம் பணம் கொடுத்து மதுபானம் வாங்கி வரும்படி கூறினார். பயந்துபோன தினேஷூம் கடைக்கு சென்று மதுபானம் வாங்கி வந்தார்.

அப்போது அந்த நபரை காணவில்லை. அதன்பிறகுதான் அந்த நபர் நூதன முறையில் தன்னிடம் இருந்து நகை, செல்போனை பறித்து சென்றது தினேஷூக்கு தெரியவந்தது. இதுபற்றி விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story